fbpx
Homeதலையங்கம்அம்பலமான முறைகேடுகள்: பதில் சொல்வாரா பிரதமர்?

அம்பலமான முறைகேடுகள்: பதில் சொல்வாரா பிரதமர்?

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற்றது. இக்கூட்டத் தொடரின் மணிப்பூர் வன்முறை குறித்த விவாதத்திற்கு இடையே 23 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பல்வேறு திட்டங்கள் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையின் மூலம் பா.ஜ.க அரசின் பல்வேறு ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஒரு கிலோ மீட்டருக்கு 18 கோடியாக இருந்த துவாரகா துரித நெடுஞ்சாலை செலவு ரூ.250 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதலில் இத்திட்டத்தின் செலவு ரூ.528.8 கோடியாக இருந்தது.

ஆனால் பின்னர் ரூ.7287.2 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிஏஜி சுட்டிக்காட்டியுள்ளது. இதன் மூலம் முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் உருவாக்கிய எஞ்சினில் வடிவ குளறுபடிகள் இருந்ததால் ரூ.159 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமரின் சுகாதாரக் காப்பீடு திட்டத்தில் 7.5 லட்சம் பேர் ஒரே எண்ணில் இணைக்கப்பட்டிருப்பதை சிஏஜி அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
பாரத் மாலா திட்டத்தின் ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளது.

மேலும் அயோத்தியா மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தியதில் ரூ.8.22 கோடி வீணாக்கப்பட்டுள்ளது என சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இப்படிப் பல திட்டங்களில் நடந்த தில்லுமுல்லுகளை சிஏஜி அம்பலப்படுத்தினாலும் மிக முக்கியமான குற்றச்சாட்டாக வெளிவந்திருப்பது துவாரகா விரைவுச்சாலை திட்ட முறைகேடு தான்.

இந்த சிஏஜி அறிக்கையைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசுக்குக் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. இந்த புகாரை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஊழல் அரசு என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டி உள்ளார்.

பிரதமர் மோடி தனது அரசியல் எதிரிகளின் ஊழலைப் பற்றி பேசுவதற்கு முன்பு தனது ஆட்சியில் நடக்கும் ஊழலையும் அவர் பார்க்க வேண்டும். பாஜக ஆட்சியின் ஊழலும், கொள்ளையும் தேசத்தை நரகத்திற்கு அழைத்துச் செல்கிறது என கார்கே கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இதற்கு பிரதமர் மோடி என்ன பதில் சொல்லப்போகிறார்? பதில் சொல்வாரா அல்லது இதிலும் மவுனம் காப்பாரா…?

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது!

படிக்க வேண்டும்

spot_img