fbpx
Homeதலையங்கம்எதிர்க்கட்சிகளுக்கு தோல்வி தந்த வெற்றி!

எதிர்க்கட்சிகளுக்கு தோல்வி தந்த வெற்றி!

மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் இரு சமூகத்தினர் இடையே வன்முறை ஏற்பட்டு அது கலவரமாக மாறியது. இந்த வன்முறையில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த மணிப்பூர் விவகாரம் குறித்து கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர் கோரிக்கை வைத்து வந்தன. பிரதமர் மோடி அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அடம் பிடித்தன.

ஆனால் விரிவான விவாதத்திற்கு நாடாளுமன்றம் அனுமதி அளிக்காத காரணத்தால், பிரதமரை அவைக்கு வரவழைக்க வேறு வழியின்றி மக்களவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்தன.

இந்த தீர்மானம் மீதான விவாதம் நேற்று முன்தினம் (ஆகஸ்டு 8) முதல் தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. நேற்று நம்பிக்கை இல்லாத தீர்மானம் மீது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசினார்.

அவர் பேசுகையில், மணிபூரை இந்தியாவின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி கருதவில்லை. அவர் நேரில் அங்கு செல்லவில்லை. மணிப்பூர் சம்பவத்தில் இந்தியாவை பாஜக கொன்றுவிட்டது.

பாரதமாதாவை அவர்கள் கொன்று விட்டார்கள். பாஜகவினர் தேசத்துரோகிகள் என பல்வேறு காட்டமான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். இதனால் நேற்று நாடாளுமன்ற மக்களவை பெரும் பரபரப்பாக இருந்தது.

இந்நிலையில் விவாதம் முடிந்த நிலையில், இன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி விளக்கம் அளிக்க உள்ளார். இன்று பிரதமர் மோடி பதிலுரை அளித்த பின்பு குரல் வாக்கெடுப்பின் மூலம் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்படும்.

பாஜகவுக்கு ஆதரவு எம்பிக்கள் அதிகமாக இருப்பதால், எப்படியும் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்படாது. ஆனால், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் நோக்கம் நிறைவேறி விட்டது. இதற்காகத் தானே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையே கொண்டு வந்தார்கள்?

‘பிரதமர் நாளொன்றுக்கு 17 மணி நேரம் பணியாற்றுவதாக மக்களவையில் நேற்று அமித்ஷா தெரிவித்தார். கடந்த 80 நாட்களாக 1360 மணிநேரம் பணியாற்றியும் மணிப்பூர் கலவரத்தை அடக்க முடியவில்லை என்றால் நீங்கள் ஆளும் தகுதியை இழந்துவிட்டீர்கள் என்று தானே பொருள். நம்பிக்கையில்லா தீர்மானம் சரி தானே!’ & இது சு.வெங்கடேசன் எம்பியின் அருமையான பதிவு.

ஆக, நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்றாலும் எதிர்க்கட்சிகளுக்கு இமாலய வெற்றி தான் என்றால் மிகையாகாது. தோல்வியையே அவர்கள் வெற்றியாக மாற்றிக் கொண்டு விட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img