தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய், சமீப காலமாக சினிமாவைத் தாண்டி பொது விவகாரங்களிலும் அக்கறை காட்டி வருகிறார். தனது படத்தில் சில அரசியல் பஞ்ச் வசனம் வைத்து பேசுவதோடு, ஊழல்கள் குறித்தும் பேசி அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளார். தனது மக்கள் இயக்கம் சார்பாக மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை அவ்வப்போது அவரது ரசிகர்கள் செய்து வருகின்றனர்.
ரத்த தான முகாம், பசியால் வாடுவோருக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட பணிகளை அவரது விஜய் மக்கள் இயக்கத்தினர் தீவிரமாக செய்து வருகின்றனர். இது நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த மாதம் 17 ஆம் தேதி விஜய் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை அளித்ததோடு அவர்களுடன் புகைப்படம் எடுத்தார்.
நடிகர் விஜயின் இந்த செயல் அவர் அரசியலுக்கு வருவதை உறுதி செய்யும் விதமாகவே இருப்பதாக அரசியல் நோக்கர்கள் மத்தியில் சொல்லப்பட்டது.
இந்த நிலையில், 234 தொகுதிகளில் இருந்து தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை நடிகர் விஜய் சென்னைக்கு அழைத்து உள்ளார். சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இன்று விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நிர்வாகிகளுடனான ஆலோசனையின் போது அரசியலில் குதிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தக்க தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டின் அரசியலுக்கும் திரைப்படத் துறைக்கும் எப்போதும் தொடர்பு இருந்து வந்துள்ளது.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்று முதல்வர் நாற்காலியில் அமர்ந்ததை யாரும் மறக்க முடியாது. மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியும் தனது தூள்பறக்கும் சினிமா வசனங்கள் மூலம் தமிழ் மக்களைத் தன்பால் ஈர்த்தவர் தானே.
ஏன்? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் களத்தில் நுழைய முயன்றார். ஆனால் என்ன காரணத்தாலோ பின்வாங்கி விட்டார்.
அந்த வரிசையில் நடிகர் விஜய்க்கும் அரசியல் ஆசை வந்து விட்டது போலும். 2024 நாடாளுமன்றத் தேர்தலிலேயே விஜய் அரசியல் களத்தில் இறங்க வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அரசியலுக்கு வர யாருக்கும் உரிமை இருக்கிறது. அதற்காக தான் சம்பாதித்து வைத்திருக்கிற சினிமாப் புகழைப் பயன்படுத்துவதற்கும் உரிமை இருக்கிறது. அதில் தவறு அல்ல.
ஆனால் யார் அரசியலுக்கு வந்தாலும் மக்களுக்கு நல்லது செய்வேன் என்ற உறுதியோடு வரவேண்டும்.
அரசியலுக்கு விஜய் வருவாரா, வர மாட்டாரா? என்பது இதுவரை கேள்விக் குறியாகத் தான் நிற்கிறது. போகிறப் போக்கைப் பார்த்தால் எதுவும் நடக்கலாம்.
நடப்பது நல்லதாக இருந்தால் சரி!



