17 ஆண்டுகால ஜல்லிக்கட்டு வழக்கு கடந்து வந்த பாதை நீளமானது. 2006-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தடைவிதித்தது.
2007- சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு ரத்து செய்யப்பட்டு நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதித்தது. 2008- பாஜகவின் மேனகா காந்தி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை விதித்தது.
2009-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை முறைப்படுத்தும் வகையில் ஜல்லிக்கட்டு சட்டம் அமல்படுத்தப்பட்டது. 2009-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு சட்டத்தின் அடிப்படையில் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
புதிய ஜல்லிக்கட்டு சட்டம் அமலுக்கு வந்தது.
2011-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது வித்தைகள் காட்டுவதற்கு தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளைகளை சேர்த்தது. இதுதான் பீட்டாவின் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் கோரிக்கைக்கு ஆதாரமாகவே இருந்தது.
2012-ம் ஆண்டு தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் மட்டும் நீதிமன்ற அனுமதியுடன் ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. அதே ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்தது.
2012-ம் ஆண்டு இறுதியில் 2013-ல் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்தது. 2014-ல் மீண்டும் பிப்ரவரி மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமானது 2014-ம் ஆண்டு மே 7-ந் தேதியன்று, ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டது. இத்தடையை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது.
2017-ம் ஆண்டு தமிழ்நாட்டில் மாணவர்கள் கிளர்ச்சி ஏற்பட்டது. தமிழ்நாட்டின் சென்னை முதல் குக்கிராமங்கள் வரை ஒரு காலம் வரை நடைபெற்ற அமைதிவழிப் புரட்சி ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இதனையடுத்து 2017 ஜனவரி 21-ல் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது.
இப்படியாக ஜல்லிக்கட்டு சட்டப்போராட்டம் நீண்டு கொண்டே போனது. இறுதியாக, நேற்று உச்சநீதிமன்றமானது ஜல்லிக்கட்டு நடத்தலாம்; ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க முடியாது; ஜல்லிக்கட்டுக்கான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்கிற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி இருக்கிறது.
தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு கடந்த 17 ஆண்டுகளாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தொடங்கி உச்சநீதிமன்றம் வரை நடைபெற்று வந்து தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இயற்கையோடும், விலங்குகளோடும் இணைந்து வாழும் தமிழ்நாட்டு மக்களால் ஒருபோதும் கால்நடைகளுக்குத் துன்பம் ஏற்படாது என்பதை நாட்டின் தலைமை நீதிமன்றமே ஒப்புக்கொண்டதுடன், ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தமிழ்நாட்டுக் கலாச்சாரத்துடன் ஒருங்கிணைந்தது என்றும் அங்கீகரித்துள்ளது பெருமைக்குரியது.
இந்த தீர்ப்பு தமிழ்நாட்டு மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி உள்ளது. பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு விட்டது. இந்த இமாலய வெற்றிக்கு காரணமான அத்தனை பேருக்கும் தீர்ப்பை அளித்த நீதியரசர்களுக்கும் தமிழ்நாடே நன்றி செலுத்தி வருகிறது.
எந்தக் கவலையும் இல்லாமல் இனி ஜல்லிக்கட்டைக் கொண்டாடலாம். பொங்கல் திருநாளுக்காக இப்போதிருந்தே காத்திருப்போம்!



