ஊட்டி தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி இன்று துவங்கியது. ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட கொய் மலர்களை கொண்டு மயில் உட்பட பல்வேறு மலர் அலங்காரம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் கோடை காலத்தில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நிலையில், அவர்களை மகிழ்விக்க தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, ஊட்டியில் ரோஜா மற்றும் மலர் கண்காட்சி, குன்னூரில் பழக்கண்காட்சி மற்றும் கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி ஆகியன நடத்தப்படுகிறது.
இதில், மலர் கண்காட்சியே முக்கிய விழாவாக கருதப்படுகிறது. இன்று துவங்கி 5 நாட்கள் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.
இந்த மலர் கண்காட்சியின் துவக்க விழா இன்று நடந்தது. விழாவில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி எம்பி., ராசா ஆகியோர் கலந்து கொண்டு மலர் கண்காட்சியை துவக்கி வைத்தனர். ராணுவ இசை முழங்க கண்காட்சி தொடங்கப்பட்டது. விழாவில், நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
மலர் கண்காட்சியை முன்னிட்டு பூங்கா பொலிவுப்படுத்தப்பட்டுள்ளது. பூங்கா முழுவதிலும் பல லட்சம் வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. 45 ஆயிரம் கார்னேசன் மலர்களை கொண்டு 18 அடி உயரம், 40 அடி அகலம் கொண்ட பிரமாண்ட மயில் அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பல ஆயிரம் மலர்களை கொண்டு சீட்டா, டால்பின்ஸ், பாண்டா கரடி, பட்டாம் பூச்சி, காண்டா மிருகம், புறா, வரையாடு, பணை மரம், நடனமங்கை, செங்காந்தள் மலர், செல்பி ஸ்பாட் உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் பல ஆயிரம் கொய் மலர்களை கொண்டு உருவாக்கப்படவுள்ளது.
மேலும், ஊட்டி 200, தாவரவியல் பூங்கா துவக்கப்பட்டு 175 ஆண்டுகள் ஆன நிலையில், ஊட்டி கார்டன் 175 அலங்காரம் மற்றும் 125வது பிளவர் ஷோ போன்ற மலர் அலங்காரம் பல ஆயிரம் மலர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக பெங்களூர், ஒசூர் போன்ற பகுதிகளில் இருந்து கார்னேசன் மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. பல ஆயிரம் கொய் மலர்களை கொண்டு 10 அலங்கார வளைவுகள் உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு துறைகள் சார்பில் பல்வேறு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
மலர்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முக்கிய கண்காட்சி பொருட்கள் கொண்டு வரப்பட்டு காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.
35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளை கொண்டு மாடங்களில் மலர் அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், லில்லியம், ஆர்கிட் மலர்கள் உட்பட பல்வேறு வகையான மலர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இது சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. ஐந்து நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. மலர் கண்காட்சியை காண இன்று காலை முதல் ஊட்டியை சுற்றுலா பயணிகள் முற்றுகையிட்டுள்ளனர்.
இதனால், அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல் காணப்படுகிறது. போக்குவரத்து சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் நீலகிரி மாவட்டம் முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், மலர் கண்காட்சியை காண வரும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் வசதிக்காக வெளி மாவட்டங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் ஊட்டிக்கு இயக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சியை காண ஊட்டியை சுற்றுலா பயணிகள் முற்றுகையிட்டுள்ள நிலையில், அனைத்து லாட்ஜ் மற்றும் காட்டேஜ்களும் நிரம்பி வழிகின்றன.



