அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் என்னவெல்லாம் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதா மறைந்த சமயத்தில் ஓபிஎஸ் முதல்வராகப் பொறுப்பேற்றார்.
இருப்பினும், அடுத்து சசிகலா தான் முதல்வர் ஆவார் என கூறப்பட்டது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓபிஎஸ், தர்ம யுத்தத்தை நடத்த, மறுபுறம் சொத்துக் குவிப்பு வழக்கிலும் தீர்ப்பு வந்தது.
இதனால் அப்போது சசிகலாவால் முதல்வராக முடியாமல் போனது. அவர் சிறைக்குச் சென்ற சமயத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். அப்போது ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி நேர் எதிராகத் தான் இருந்தனர்.
இருப்பினும், அதன் பின்னர் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்படவே இருவரும் ஒன்றாக கை கோர்த்தனர். எடப்பாடி முதல்வராகவும் ஓபிஎஸ் துணை முதல்வராகவும் இருந்தனர். கட்சியில் ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடியும் இருந்தனர்.
இருப்பினும், தேர்தலில் தோல்வியடைந்தது முதலே பல விஷயங்களில் இரு தரப்பிற்கும் இடையே மோதல் தொடங்கியது. அதன்படி கடந்தாண்டு நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார். அதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட நிலையில், விரைவிலேயே அவர் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கில் அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்துள்ளது.
இதனால் இப்போது ஒட்டுமொத்த கட்சியும் எடப்பாடி பழனிசாமிக்கு கைவசம் சென்றுள்ளது.
இந்தச் சூழலில் நேற்றைய தினம் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், டிடிவி தினகரனை அடையாறு இல்லத்தில் போய் சந்தித்தார். ஓபிஎஸ் உடன் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனும் சென்றார்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு டிடிவி தினகரனும் ஓ.பன்னீர் செல்வமும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அதிமுகவை மீட்க நானும் ஓபிஸ்சும் இணைந்து செயல்பட இருப்பதாக டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
முன்னதாக, ஐபிஎல் போட்டிக்கு நடுவே முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். இதுதான் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என ஓபிஎஸ் அணியினர் கூறினாலும், அதை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பாஜகவை நம்பி இனி பிரயோஜனமில்லை எனக் கருதி, தனியாக ஓபிஎஸ் காய் நகர்த்த தொடங்கிவிட்டார் எனவும் மூத்த பத்திரிகையாளர் கள் தெரிவிக்கின்றனர்.
இதை பூடகமாக தெரிவிக்கும் வகையிலேயே, பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என ஜெயக்குமார் ட்வீட் செய்தார் போலும்.
தொடர்ந்து சசிகலாவையும் சந்திக்க ஒ.பி.எஸ் திட்டமிட்டு உள்ளார். சசிகலாவுடனான சந்திப்புக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகிய மூவரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சில அஸ்திரங்களை கையில் எடுப்பார்கள் எனத் தெரிகிறது.
எது எப்படியோ, ஓபிஎஸ் ஏதோ மாஸ்டர் பிளான் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு செயலாற்றத் தொடங்கி விட்டார். அது மட்டும் உண்மை.
என்ன தான் நடக்கும்.. நடக்கட்டும் பார்க்கலாம்!



