தமிழ்நாடு அரசின் மீது அடுத்தடுத்து புகார்களை கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, சிதம்பரம் கோவில் தீட்சதர்களுக்கு ஆதரவாக பேட்டி அளித்திருப்பது பெரிய சர்ச்சையை ஏற் படுத்தி உள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி அப்படி என்ன கூறினார்? அவர் அளித்த பேட்டி: இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இல்லாத சிதம்பரம் நடராஜர் கோவிலில் 2022ல் பழிவாங்கும் வகையில், சமூக நலத் துறையின் அரசு அதிகாரிகள், பொது தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். அங்கே குழந்தைத் திருமணங்கள் நடப்பதாக எட்டு பேர் மீது புகார்களை அளித்தனர். ஆனால் அங்கே அத்தகைய திருமணங்கள் நடக்கவில்லை. அது உண்மை இல்லை.
பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், ஆறாம், ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை, வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, ‘இரண்டு விரல் பரிசோதனை’ என்னும் கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த கொடுமைகளால் அந்த சிறுமிகள் சிலர் தற்கொலைக்கு முயன்றனர். இது என்ன என்று கேட்டு முதல்வருக்கு கூட நான் விளக்கம் கேட்டு கடிதம் எழுதினேன். இப்போது, நடக்கும் அனைத்திற் கும் பின்னணியில் இருப்பது அரசுதான். நான் இந்த அரசாங்கத்தைப் பாராட்ட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா இவ்வாறு அவர் எதிர் கேள்வியோடு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
ஆளுநர் கூறியிருக்கும் குற்றச்சாட்டு மிகவும் சீரியஸானது. இது பொத்தாம் பொதுவான குற்றச் சாட்டு அல்ல. அதற்கான ஆதாரங்களை திரட்டி அதன் அடிப்படையில் தான் குற்றம் சாட்டியிருக்க வேண்டும். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என்.ரவி எந்த அடிப்படையில் இந்த புகாரை கூறினார்?.
ஆளுநரின் குற்றச்சாட்டை ஆதாரங்களுடன் மறுத்திருக்கிறது தமிழ்நாடு அரசு. குழந்தை திரு மணம் நடந்தது உண்மை என்றும் இரட்டை விரல் பரிசோதனை நடக்கவில்லை என்றும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவே அறுதியிட்டு கூறி இருக் கிறார். சிலர் தற்கொலைக்கும் முயற்சி செய்ததாக ஆளுநர் ஒரு விறுவிறுப்பு புதினமே எழுதுவதுபோல பேட்டியில் கூறியுள்ளதற்கு பதிலாக சைலேந்திர பாபு, அப்படி ஏதும் நடைபெறவே இல்லை என்று அறிக்கை தந்துள்ளாரே. அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன விளக்கம் கூறப் போகிறார்?
தமிழ்நாடு அரசின்மீதும் தமிழ்நாட்டுக் காவல்துறை மீதும், பொய்யான குற்றச்சாட்டை ஆளுநர் கூறியுள்ளார் என்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரே கூறியது சாதாரண விஷயமா? ஆளுநர் ரவி வெட்கித் தலைகுனிந்து, தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வரவேண்டாமா? என்று மாநிலம் முழுவதும் மக்களால் வாதம் நடத்தப்பட்டு வருகிறது.
குழந்தை திருமணம் நடந்தது 100 சதவிகிதம் உண்மை. அங்கே இருக்கும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி இதை கண்டுபிடித்து தான் சென்று இருக்கிறார்கள். சிதம்பரம் தீட்சிதர்கள் 4 குழந்தை திருமணத்தை செய்து வைத்ததாக புகார் எழுந்துள்ளது. திருமண மண்டபத்தில் 2021 ஜனவரி 25 அதிகாலையில் நடைபெற்ற திருமண பதிவை வைத்து, குழந்தைத் திருமணத்தை போலீசார் உறுதி செய்துள்ளனர். ஆனால் இது கூட பொய் என்று அவர்கள் சொல்ல வாய்ப்பு உள்ளதால் புகைப்பட ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதெல்லாம் ஆளுநருக்கு தெரியாமலா இருந்திருக்கும்?
ஆளுநரின் குற்றச்சாட்டு ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்யாகவே இருக்கட்டும்; இல்லாமலும் போகட்டும். ஆனால் குற்றஞ்சாட்டியிருப்பது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. அதனை மறுத்தி ருப்பது தமிழ்நாடு அரசு. தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் வழக்கை தொடுத்து இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அவர் தன் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும். உண்மை எது என்பதை நாட்டு மக்களுக்கு ஆதார பூர்வமாக அம்பலப்படுத்த வேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கும் உண்டு. ஆதாரங்களுடன் உண்மை மக்கள் மன்றத்திற்கு வந்தே ஆக வேண்டும். வருமா?



