fbpx
Homeதலையங்கம்திருச்சி மாநாடும் ஓபிஎஸ் செல்வாக்கும்!

திருச்சி மாநாடும் ஓபிஎஸ் செல்வாக்கும்!

அதிமுக தலைமையை கைப்பற்ற நினைத்த ஓபிஎஸ்சின் கனவை எடப்பாடி உடைத்ததால், அவருக்கு எதிராக திருச்சியில் தர்மயுத்த மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, திருச்சி பொன்மலை ஜி கார்னரில் நேற்று மாலை ஓபிஎஸ் அணி சார்பில் முப்பெரும் விழா மாநாடு நடந்தது. சசிகலா, டிடிவி.தினகரன், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர்கள் எல்லாம் வருவார்கள் என ஓபிஎஸ் கூறினார்.

ஆனால், சசிகலா, டிடிவி.தினகரன் என யாரும் ஓபிஎஸ் பக்கம் தலைகாட்டவில்லை. தொண்டர்கள் என் பக்கம்தான் இருக்கிறார்கள் என்று கூறினார். ஆனால், தொண்டர்கள் பலத்தை நிரூபிக்க முடியவில்லை. மாநாட்டில் பங்கேற்றவர்கள் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட கணிசமாக குறைந்து காணப்பட்டது.

அதிமுகவை கைப்பற்றும் அனைத்து வழிகளும் கைவிட்டு போனதால், மாநாட்டில் பங்கேற்க யாரும் விரும்பவில்லை போலும். எதிர்பார்த்த அளவுக்கு கூட்டத்தை கூட்ட முடியாததால் அப்செட்டில் உள்ளார், ஓபிஎஸ்.

மாநாட்டில் 20 ஆயிரம் நாற்காலிகளே போடப்பட்டதாக கூறப்படுகிறது. லட்சம் பேர் வருவார்கள் என்று ஓபிஎஸ் கூறிய நிலையில் இந்த 20 ஆயிரம் நாற்காலிகளும் பாதிக்கு மேல் காலியாகத்தான் கிடந்தன.

குறிப்பாக, தேனி மாவட்டத்தில் இருந்து குறைவான வாகனங்களே வந்திருந்ததாக தெரிகிறது. தனது சொந்த மாவட்டத்தில் இருந்தே கூடுதல் ஆட்களை கொண்டு வர முடியாத நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு புஸ்வாணம் போல் சரிந்துள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இந்த மாநாடு மூலம் தனது செல்வாக்கை நிரூபித்து காட்ட ஓபிஎஸ்சுக்கு பல கோடி ரூபாய் வீணானது தான் மிச்சம்; ஏமாற்றமே மிஞ்சியது. சரிந்த ஓபிஎஸ்சின் செல்வாக்கை திருச்சி மாநாடே அம்பலப்படுத்தி விட்டது. அவரது அரசியல் வாழ்க்கை பெரிய கேள்விக்குறியாகி மாறி இருக்கிறது.

இனி என்ன செய்யப் போகிறார், ஓ.பி.எஸ்?

படிக்க வேண்டும்

spot_img