fbpx
Homeதலையங்கம்12 மணிநேர வேலை சட்ட மசோதா வாபஸ் ஆகுமா?

12 மணிநேர வேலை சட்ட மசோதா வாபஸ் ஆகுமா?

தமிழக அரசு தொழிற்சாலை சட்டத் திருத்தம் 65-ஏ பிரிவில் திருத்தம் செய்யும் சட்ட வரையறையை சட்டப்பேரவையில் கொண்டு வந்தது. இந்த மசோதா தொழிலாளர்களின் பணிநேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக மாற்றும் நடைமுறை என தெரிவிக்கப்பட்டது. இந்த சட்டம் தினசரி 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் வேலை மற்றும் 3 நாட்கள் விடுப்பு என்ற முறையை கொண்டுள்ளது.

இந்த சட்ட மசோதாவுக்கு பேரவையில் காங்கிரஸ், மதிமுக, மமக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக கூட்டணிக்கட்சிகள், மற்றும் எதிர்கட்சிகள் என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருந்தும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 12 மணி நேர வேலை தொடர்பான தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்பப்பெற கோரி, மே 12ல் தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தம், மற்றும் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

‘‘வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழ் நாட்டை நோக்கி வருகின்றன. தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மை வரவேண்டும் என்பதற்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

எந்தத் தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இது சம்பந்தமாகக் குழு அமைக்கப் படும்‘’ என்று தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், ‘‘வாரத்திற்கு 48 மணிநேரம் வேலை பார்க்கவேண்டும்.
இந்த நேரத்தை 4 நாள்களில் முடித்துவிட்ட பிறகு, 5வது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்குச் சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் உள்ளது. அனைத்து நிறுவனங்களுக்கும் இந்தச் சட்டம் இல்லை. விரும்பக் கூடிய தொழிற்சாலைகள் தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்‘’ என்று கூறியுள்ளார்.

நாளொன்றுக்கு 14 மணிநேரம் உழைப்பு என்ற ஒரு காலகட்டம் இருந்ததுண்டு. 1945 நவம்பர் 28 அன்று டாக்டர் அம்பேத்கர் முயற்சியால் தொழிலாளர் பிரதிநிதி, ஆலை உரிமையாளர் பிரதிநிதி, அரசுப் பிரதிநிதி ஆகியோர் அடங்கிய குழுவில் முத்தரப்பு ஒப்பந்த அடிப்படையில், தொழிலாளர் பணிநேரம் 8 மணிநேரமாகக் குறைக்கப்பட்டது என்பது வரலாறு.

இப்பொழுது நாம் பின்னோக்கிப் பயணிக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது. சம்பளத்துக்காக அதிக நேரம் உழைப்பது என்ற மனோ நிலையை உருவாக்குவது மனித உரிமைக்கும், நலனுக்கும் எதிரானது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இதில் வருவாய் என்பதைவிட மனித உழைப்பு, மனித நேயம், நலம், குடும்ப நலன் போன்றவற்றை முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
விருப்பம் உள்ளவர்கள் 12 மணிநேரம் உழைக்கலாம் என்று கூறுவது, ஏற்கத்தக்கதல்ல.

மக்கள் நலன் கருதி செயல்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ நல்லரசு இந்த சட்ட மசோதாவை உடனடியாக மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும்.

இந்த நிலையில் தொழிற்சங்கங்களுடன் தமிழ்நாடு அரசு இன்று பிற்பகலில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதில் நல்ல முடிவெடுத்து அதன்மூலம் 12 மணிநேர வேலை சட்ட மசோதா திரும்பப்பெறப்படும் என்ற அறிவிப்பு வெளியாக வேண்டும்.

அதைத் தான் தமிழ்நாட்டு தொழிலாளர்களும் பொதுமக்களும் ஒட்டுமொத்தமாக எதிர்பார்க்கிறார்கள்.

மனிதர்கள் இயந்திரங்கள் அல்ல!

படிக்க வேண்டும்

spot_img