அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
கர்நாடகாவில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் மூலம் முன்னாள் முதல்வர் ஓபன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் உச்சபட்ச அதிகாரத்தில் இருந்த ஓ பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின்னர் நீதிமன்றத்தில் அதற்கான வழக்குகளை தொடுத்து அதிலும் அடுத்தடுத்து தோற்றார்.
தேர்தல் ஆணையமும் ஓ பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்கவில்லை. மாறாக எடப்பாடி பழனிசாமிக்கு எல்லாமே சாதகமாக நடந்துள்ளது.
இது எப்படி நடந்தது? ஓ.பன்னீர்செல்வம் செய்த தவறுகள் என்ன? அதிமுகவின் அதிகாரத்தை கைப்பற்றும் போட்டியில் பின்னடைவை சந்தித்தது எப்போது?
ஒரு வேளை தர்மயுத்தம் தொடங்காமல் இருந்திருந்தால், சசிகலா சிறைக்கு சென்ற பின்னர், மீண்டும் ஓ.பன்னீர்செல்வமே முதல்வராக ஆகி இருப்பார்.
ஜெயலலிதா எப்படி முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்திடம் கொடுத்துவிட்டு சென் றாரோ அதுபோல் சசிகலாவும் சென்றிருக்க மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கும்.
இரண்டாவதாக, எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும், ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டதற்கு பொதுக்குழுவை உடனே கூட்டி அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.
அந்த சமயத்தில் எடப்பாடி பழனிசாமி சாதுர்யமாக செயல்பட்டு, பொதுக்குழுவில் தீர்மானத்தை நிராகரிக்க செய்தார். பெரும்பான்மை அதிமுக நிர்வாகிகள் தன்னை நிராகரிக்கிறார்கள் என்ற போது உடனே மக்கள் மன்றத்திற்கு போகாமல் நீதிமன்றம் போனது தான் ஓபிஎஸ் செய்த 3வது தவறு.
இப்படித் தான் ஓபிஎஸ் வீழ்ச்சியை அரசியல் விமர்சகர்கள் பார்க்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமியால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட உடன், உடனடியாக ஆதரவு வட்டத்தை அதிகரித்து, தனது தலைமையில் பலப்படுத்தி, இடைத்தேர்தல்களில் நின்று வென்று ஜெயித்து மக்கள் மன்றத்தில் நிரூபித்து இருந்தால், கட்சி அவர் பக்கம் வந்திருக்கும். ஆனால் ஓபிஎஸ் அப்படி செய்யவில்லை.
மாறாக நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்து வழக்குக்கு மேல் வழக்கை போட்டார். ஆனால் இதில் எந்த பயனும் கிடைக்கவில்லை
காரணம் சட்டத்தின் நான்கு முனைகளுக்குள்தான் நீதிமன்றங்கள் செயல்பட முடியும் என்பதால் ஓபிஎஸ்க்கு சாதகமாக இதுவரை எதுவும் நடக்கவில்லை என்பதே உண்மை.
ஆக, பெரிய அளவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது. அவருக்கு கைகொடுக்க மீதமிருப்பது மக்கள் மன்றமே.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. ஓபிஎஸ்க்கு எப்போது கிடைக்கும் அந்த தீர்ப்பு?



