கர்நாடகா சட்டசபைக்கு மே 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனுத் தாக்கலும் துவங்கி விட்டது. அங்கு தேர்தல் களம் எப்போதும் போல அனல் பறந்து கொண்டிருக்கிறது.
ஏற்கனவே ஜேடிஎஸ், காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியிலுமே வேட்பாளர்கள் பட்டியலில் அதிருப்திகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
காங்கிரஸ் கட்சி அண்மையில் 166 வேட்பாளர்களை அறிவித்தது. இதில் 11 பேர் முஸ்லிம் வேட்பாளர்கள் இடம்பெற்றிருந்தனர். ஆனாலும் முஸ்லிம்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என அதிருப்தி குரல்கள் எழுந்தன.
இந்நிலையில் 189 வேட்பாளர்களுடன் பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. கர்நாடகா காங்கிரஸ் தலைவர்களான சித்தராமையா மற்றும் டிகே சிவகுமாருக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மூத்த தலைவர்களான சோமண்ணா, அசோக் ஆகியோரை பாஜக வேட்பாளர்களாக அறிவித்திருந்தது.
மேலும் 189 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட இல்லை.
இது தொடர்பாக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவிடம் நேற்று இரவு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் மழுப்பலான பதிலை கூறினார். இதர மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது என்பதுதான் தேஜஸ்வி சூர்யாவின் பதில்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் முஸ்லிம்களுக்கான 4% இடஒதுக்கீடு பறிக்கப்பட்டு ஒக்கலிகா, லிங்காயத்து ஜாதிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது. இது முஸ்லிம்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு மீண்டும் வழங்கப்படும் என அக்கட்சி பிரசாரம் செய்து வருகிறது.
தற்போது முஸ்லிம் ஒருவரை கூட வேட்பாளராக பாஜக அறிவிக்காதது அக்கட்சிக்கு மேலும் பின்னடைவாக இருக்கும் என்பது ஒருதரப்பு கருத்து. அதேநேரத்தில் இந்துக்கள் வாக்குகளை ஒருமுகப்படுத்தும் பாஜகவின் இந்த யுக்தி கை கொடுக்கலாம் எனவும் மற்றொரு தரப்பு கூறுகிறது.
இதனிடையே 189 பேர் கொண்ட இந்த பட்டியலில் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பலருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாஜக தலைமைக்கு எதிராக சிட்டிங் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் பல இடங்களில் போராட்டங்களை நடத்தி உள்ளனர்.
இவ்வாறாக வேட்பாளர்கள் பட்டியல், கர்நாடகாவில் கட்சிகளில் உட்கட்சி பூசலை உருவாக்கி உள்ளது. பாஜக வேட்பாளர் பட்டியலில் ஒரு முஸ்லிம் கூட இல்லாததே பெரும் பேசும்பொருளாக மாறி இருக்கிறது.



