fbpx
Homeதலையங்கம்ஆட்சி மாறினாலும் காட்சி மாறக்கூடாது!

ஆட்சி மாறினாலும் காட்சி மாறக்கூடாது!

மக்கள் நலப் பணியாளர்களை தி.மு.க. ஆட்சியின்போது அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நியமித்தார் என்பதாலேயே சுமார் 13 ஆயிரம் பேரை வேலை இழக்கச் செய்து வீட்டிற்கு அனுப்பினார், 2001 ஆம் ஆண்டு – முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா.

இதனைத் தொடர்ந்து நடந்த சட்டப்போராட்டத்தில் உயர்நீதிமன்றம் மக்கள் நலப் பணியாளர்களுக்கு சாதகமான தீர்ப்பு தந்தும்கூட, அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மக்கள் நலப் பணியாளர்களின் வயிற்றில் அடித்தது அதிமுக ஆட்சி.

அவ்வழக்கு விசாரணை பல கட்டங்களைத் தாண்டி, நேற்றைய தினம் (11.4.2023) மக்கள் நலப்பணியாளர்களின் நெஞ்சில் ‘‘பால் வார்க்கும்‘’ ஒரு தீர்ப்பினை அதாவது அவர்களது பணியை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தந்துள்ளது. இது ஒரு மனிதநேயத் தீர்ப்பு என்றால் மிகையாகாது.

மக்கள் நலப் பணியாளர்களில் சிலர் மறைந்து விட்டனர் என்பது வருந்தத்தக்க செய்தியாக இருந்தாலும் உயிர் வாழுபவர்களுக்கு இந்த தீர்ப்பு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. என்றாலும் பலருக்கு வயது அதிகமாகி விட்டதால் அவர்களை மக்கள் நலப்பணியாளராக பணியில் அமர்த்த முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இருந்தாலும், அவர்கள் மீது தமிழ்நாடு அரசு பரிவுகாட்ட வேண்டும். கருணையுடன் சட்டவிலக்கினை ஏற்படுத்தி அனைத்து மக்கள் நலப் பணியாளர்களுக்குப் புதுவாழ்வு தர முன்வரவேண்டும். இதனை கலைஞர் நூற்றாண்டு விழா பரிசாக அவர்களுக்கு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தருவார் என்பதில் ஐயமில்லை.

ஒரு ஆட்சி நடக்கும்போது நியமிக்கப்படும் பணியாளர்களை ஆட்சி மாறும்போது நீக்கம் செய்வது என்பது மகா பாவம். இதைவிட கொடுமை என்ன இருக்க முடியும்? இதனை உச்சநீதிமன்றமும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

மக்கள் நலப்பணியாளர்கள் அனைவரும் நிரந்தர பணியாளர்களாக நியமிக்கப்பட வேண்டும். எந்த ஆட்சி மாற்றம் நடந்தாலும் இவர்களைப் போன்றவர்கள் வாழ்வில் வசந்தம் ஒருபோதும் மாறக்கூடாது.

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறக்கூடாது!

படிக்க வேண்டும்

spot_img