தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காவிரி டெல்டா பகுதியில், வடசேரி, சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதனை தொடர்ந்து, தமிழ்நாட்டின் விவசாயிகளின் நலன் காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும், நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், மத்திய அரசின் நிலக்கரி சுரங்கங்களுக்கு எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில், டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சுரங்கம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு முன்னதாக, நிலக்கரி சுரங்க டெண்டர் கைவிடப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத் தக்கது.
தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளும் டெல்டா நிலக்கரி திட்டத்தை எதிர்த்து போர்க்குரல் எழுப்பின.
தமிழ்நாடே கொந்தளிந்த நிலையில், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் ரத்தாகி இருந்தாலும் சரி; கடும் எதிர்ப்புக்கு ஒன்றிய அரசு பணிந்து ரத்து அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டிருந்தாலும் சரி…தமிழ்நாட்டுக்கு வெற்றி கிட்டியிருக்கிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றியே இது!



