கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள காட்டூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில் ரமலான் மாதத்தை முன்னிட்டு தினமும் 3000 பேருக்கு ரமலான் கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு இஸ்லாமிய ஆண்டின்போதும் ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பை கடைபிடித்து வருகின்றனர்.
இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக நோன்பு உள்ளது.
புனித நூலான திருக்குர்ஆன், இறைவனிடம் இருந்து அவரது தூதர் முகம்மது நபிக்கு, வானவர் ஜிப்ரீல் மூலம் முதன்முறையாக அருளப்பட்டது. இதன் காரணமாக ரமலான் புனித மாதமாக முஸ்லிம்களால் கருதப்படுகிறது.
இஸ்லாமிய மக்களின் புனித மாதமாக கடைபிடிக்கும் ரமலான் நோன்பு ஆரம்பமாகிவிட்ட நிலையில், இந்த மாதம் தமிழகம் முழுவதிலும் உள்ள எல்லா பள்ளிவாசல்களிலும் ஒரு மாதத்துக்கு கஞ்சி தயார் செய்யப்படும்.
’நோன்புக் கஞ்சி’
’நோன்புக் கஞ்சி’ என்று அழைக்கப்படும் இந்த கஞ்சியை பள்ளிவாசல்களில் நோன்பு துறக்கும் இஸ்லாமியர்கள் உட்கொள்வதோடு, சகோதர சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவருக்கும் கொடுத்து மகிழ்வர்.
இந்த ’நோன்புக் கஞ்சி’ நமது உடலின் செரிமான மண்டலம் நன்கு செயல்படுவதற்கு உறுதுணையாக இருக்கிறது. மேலும், நாள் முழுவதும் உண்ணா நோன்பிருந்து வாடிப் போய் இருக்கும் மக்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
அந்த வகையில் மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியில் அமைந்துள்ள சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில் தினம் தோறும் 120 கிலோ கஞ்சி காய்ச்சப்பட்டு 3000 பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது.



