தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளினால் பலரும் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டனர். எனவே, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசரச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றி, அதற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று, ஆளுநரின் ஒப்புதலையும் பெறுவதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ம் தேதி ஆளுநர் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த அவசரச் சட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி அன்றைய தினமே பரிசீலித்து உடனடியாக ஒப்புதல் அளித்து அரசுக்கு அனுப்பிவைத்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19ந் தேதியன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்தபோது அந்த அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்குவதற்கான மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
பின்னர் ஆளுநரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 28-ந் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஒப்புதல் தராமல் தாமதப்படுத்துவதாக கருதிய நிலையில், நேரில் ஆளுநரை சந்திக்கவும் அரசு தரப்பில் நேரம் கேட்கப்பட்டது. இந்த சூழலில் நவம்பர் 24 ம் தேதி ஆளுநர் தரப்பில் இருந்து சட்ட மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பட்டது.
தமிழ்நாடு அரசும் 25 ம் தேதி அதாவது 24 மணி நேரத்திற்குள் விளக்கமும் அளித்தது. ஆனாலும், மசோதாவிற்கு ஒப்புதல் தராமல் தாமதப்படுத்தியதோடு, ஆன்லைன் ரம்மி நடத்தும் நிறுவனத்தின் அதிகாரிகளிடம் ஆளுநர் ஆலோசனை மேற்கொண்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து ஆன்லைன் ரம்மியால் தொடர் தற்கொலைகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு அரசு பேரவையில் நிறைவேற்றிய சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் திருப்பி அனுப்பினார்.
அதோடு தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் இல்லை என்றும் இன்னும் பல்வேறு விளக்கங்கள் கேட்டு சட்ட மசோதா திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகியது.
ஆன்லைன் ரம்மியால் விலைமதிப்பில்லா உயிர்கள் போவதை தடுத்து காப்பாற்ற, அடுத்த கட்ட முயற்சியாக மீண்டும் சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்படும் என கடந்த மார்ச் 9தேதி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் தடைச்சட்ட மசோதா இன்று அனைத்துக் கட்சிகள் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தொடர்பாக ‘மனசாட்சியை உறங்க வைத்து விட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் ஆவேசப்பட்டுள்ளார்.
சட்ட மசோதா மீண்டும் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய பெரும் போராட்டத்தையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையிலெடுத்துள்ளார்.
விடாது போராடும் அவருக்கு விரைவில் வெற்றி கிட்டும் என்பதில் ஐயமில்லை.
இம்முறை மசோதாவை ஆளுநரால் திருப்பி அனுப்பவியலாது, ஒப்புதல் தந்தே ஆக வேண்டும் என்ற அரசியல் விதிமுறை இருக்கிறது.
எனவே ஆளுநர் ஒப்புதல் தந்து விட்டார் என்ற ஆனந்தச் செய்தியும் விரைவில் நம் காதுகளில் எதிரொலிக்கும் என்பதிலும் சந்தேகமே இல்லை!



