இந்திய விடுதலையின் 75ம் ஆண்டு நிறைவை அனுசரிக்கும் ‘விடுதலையின் அமுதப் பெருவிழா’வின் ஓர் அங்கமாக உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஒன்றிய அரசு சார்பில் காசி தமிழ் சங்கமம் ஒருமாத நிகழ்வாகத் தொடங்கி நடந்து வருகிறது. இதனை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
இந்த விழா கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது. வாரணாசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே இருக்கும் தொடர்பினை மேம்படுத்தும் நிகழ்வாக ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர். அதனை ஒப்புக்கொள்வோம்.
ஆனால் தமிழுக்கான விழாவில்… அதுவும் ஒரு மாதம் கொண்டாடப்படும் விழாவில் தமிழின் தாயகமான தமிழ்நாட்டின் பெரும்பங்கு இருக்க வேண்டாமா? தமிழாய்ந்த பேரறிஞர்கள் திரளாகப் பங்கேற்க வேண்டாமா? தமிழ், செம்மொழியாக கொஞ்சி விளையாடும் தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலினை அழைத்து பங்கேற்கச் செய்திருக்க வேண்டுமா, வேண்டாமா?
வாரணாசியில் இப்படி ஒரு விழா நடந்து கொண்டிருக்கிறது குறித்து தமிழர்களில் எத்தனை பேருக்கு தெரிகிறது? அங்கு தமிழ் சார்ந்த என்னென்ன நிகழ்ச்சிகள் பட்டியலிட்டு நடத்தப்படுகிறது என்பது தமிழகத்தில் எதிரொலிக்கவில்லையே. பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்வோடு சரி; அதன்பிறகு தமிழக நாளிதழ்களில் கூட செய்திகள் கண்ணில் படவில்லை.
இதையெல்லாம் பார்க்கும்போது தமிழை வைத்து பாஜக அரசியல் செய்கிறதோ என்ற சந்தேகம் தான் எழுகிறது. ஒன்றிய அரசு விழாவில் தமிழ்நாட்டைப் புறம் தள்ளி விட்டு தமிழை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?. இதனை பாஜக மறுக்கலாம்.
அப்படியானால் எது தான் உண்மை?
‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சிக்கு தமிழக அரசுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அது உண்மையா? இல்லை. அழைப்பிதழ் வரவே இல்லை என்ற தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மறுத்து இருக்கிறார்கள்.
அழைப்பு எங்கே போனது? காசியில் இருந்து சென்னைக்கு தபால் மூலம் அனுப்பினார்களோ, வழியில் எங்கே தவறி விட்டதோ? என்றெல்லாம் தமிழர்கள் விமர்சித்து வருகின்றனர்.
தமிழக அரசின் ஒத்துழைப்போடு தலைசிறந்த தமிழறிஞர்கள், எழுத்தாளர்களை பங்கேற்கச் செய்து, கோவையில் நடந்த தமிழ்ச் செம்மொழி மாநாட்டைப் போல உலகமறிய விழாவை கோலாகலப்படுத்தி இருக்கலாமே. சங்கம விழாவில் சமத்துவம் எங்கே போனது?
தனியார் விழா என்றால் விட்டுவிடலாம். இது ஒன்றிய அரசின் நிகழ்ச்சி ஆயிற்றே. இனியாவது தமிழக அரசுக்கு முறையாக அழைப்பு விடுத்து மீதமுள்ள நாட்களிலாவது விழாவை சிறப்பாக்க ஒன்றிய அரசு முன்வருமா? தமிழக பாஜக தலைவர்களாவது முயற்சி எடுப்பார்களா?



