ரூ.39.09 கோடி குட்கா ஊழலில் 2 முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய சிபிஐ முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. சரியான நடவடிக்கையாகும்.
தமிழகத்தில் கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் முதல் புகையிலை கலந்து தயாரிக்கப்படும் குட்கா, பான் மசாலா போன்ற பாக்கு வடிவிலான போதை பொருட்களை உற்பத்தி செய்யவும் விற்பனை செய்யவும் அப்போதைய அரசு தடைவிதித்துள்ளது.
என்றாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்வதாக புகார் வந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள குட்கா தயாரிப்பாளர்களின் வீடுகள் மற்றும் குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இதில் பல்வேறு ஆவணங்கள் சிக்கின. செங்குன்றம் குட்கா குடோனில் வருமான வரி அதிகாரிகள் நடத்திய சோதனையில் கைப்பற் றப்பட்ட டைரியில் குட்கா ஊழல் குறித்து அதிர்ச்சி தரும் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றிருந்தன.
ஒவ்வொரு மாதமும் குட்கா விற்பனைக்காக அதிமுக அமைச்சர்கள், போலீஸ் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட பல்வேறு தகவல்கள் சிக்கின.
மொத்தம் 12 பேரின் பெயர்கள் அந்த டைரியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவர்களுக்கு ரூ.39 கோடியே 9 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்ட விவரம் மற்றும் தகவல்கள் அதில் இடம்பெற்றிருந்தன.
எனவே சிபிஐ தற்போது அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளது. இது வரவேற்கத்தக்கதே!



