எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி மாணவர் சேர்க்கை திடீரென நிறுத்தப்பட்டது.
மேலும் இந்த இரண்டு வகுப்புகளை வரும் கல்வியாண்டு முதல் மூடுவதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதயடுத்து, எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் நிறுத்தப்படாது, அதேசமயம், அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்படுகிறது, அங்கன்வாடி மையங்களில் அந்த வகுப்புகள் செயல்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.
ஆனால் அங்கன்வாடி மையங்களில் உள்ள அமைப்பாளர்களால் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளை நடத்த முடியுமா என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி இதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில், வெளியிட்ட இந்த அறிவிப்புக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.
மாணவர்கள் நலன் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தவிர்க்க முடியாதவை. கல்வி சார்ந்த விஷயங்களில் அரசு தரப்பில் குழப்பம் தரும் அறிவிப்புகள் வெளியாவது சரியல்ல.
வல்லுனர்களின் கலந்தாய்வுக்குப் பிறகு தெளிவான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். மழலையர் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்குவதுடன் போதிய ஆசிரியர்களையும் உடனடியாக நியமிக்க வேண்டும்.
ஏழை, நடுத்தர வர்க்கத் தாய்மார்களின் சார்பில் தமிழக அரசுக்குப் பாராட்டுகள்!



