fbpx
Homeதலையங்கம்ஆன்லைன் கடன் செயலி - உஷாராக இருங்கள், மக்களே!

ஆன்லைன் கடன் செயலி – உஷாராக இருங்கள், மக்களே!

இணைய மோசடி என்பது தொழில்நுட்பங்களால் இல்லை, தந்திரங்களால் நிகழ்கின்றன. சைபர் குற்றம் என்றால் மக்களுக்கு தெரியாமலே பணத்தை எடுத்துவிடுவார்கள் என்று பரவலாக சொல்லப்படுகிறது.

ஆனால் 95% சைபர் குற்றங்கள் மக்களின் ஈடுபாடு இல்லாமல் நிகழ்வதில்லை. அதிலும் படித்தவர்களும் உயர் பதவியில் இருப்பவர்களும் கூட ஏமாந்து போகிறார்கள்.

ஆன்லைன் கடன் செயலி மூலம் நிகழும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. வங்கிகளில் கடன் பெறுவது எளிதில்லை. வங்கிகள் மற்றும் இதர அதிகாரப்பூர்வ கடன் தரும் நிதி அமைப்புகளைத் தவிர வேறு யாரும் கடன் வழங்க சட்டப்படி அனுமதியில்லை.

மேலும் வங்கிகளின் கடன் பெறுவதற்கான நடைமுறையும் அதிகம். இதனால் உடனடியாக எளிதில் கடன் வழங்குவதாகக் கூறித் தான் ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் செயலிகள் இயங்குகின்றன.

இவை சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டது கிடையாது. இவற்றை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்துவதும் கடினமான விஷயம். ஒரு செயலியை முடக்கினால் உடனடியாக வேறொரு செயலியை உருவாக்கிவிடுவார்கள்.

ஆன்லைனில் கடன் செயலியை பதிவிறக்கம் செய்யும்போதே பதிவு செய்பவரின் தொடர்பு எண்கள், புகைப்படங்கள் என அனைத்தையும் பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதியை இந்த செயலிகள் எடுத்துக் கொள்கின்றன.
அதன் பின்னர் உடனடியாக கடன் வழங்கி விடுவார்கள்.

பின்னர் அதிக வட்டியைச் செலுத்த சொல்லி மிரட்டுவார்கள். இல்லையென்றால் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்டுவிடுவோம் என்று மிரட்டுவார்கள். கூகுள் பிளே ஸ்டோர், இது போன்ற கடன் செயலிகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதில்லை. அரசாங்கம் தான் அதற்கு தேவையான ஒழுங்குவிதிமுறைகளை உருவாக்க வேண்டும்.

சைபர் மோசடிகள் ஒரு எல்லைக்கு உட்பட்டு நடப்பதில்லை. தமிழ்நாட்டில் நிகழும் சைபர் குற்றங்கள் வேறு மாநிலங்களிலிருந்தும் கூட நிகழ்த்தப்படுகின்றன.
எனவே இந்திய அளவில் சைபர் குற்றங்களை எதிர்கொள்ள அனைத்து மாநில காவல்துறையையும் ஒருங்கிணைத்து செயல்படும் வழிமுறைகளை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஆன்லைன் மோசடி குறித்து ரிசர்வ் வங்கியும் காவல்துறையும் அவ்வப்போது பொதுமக்களை எச்சரித்து வருகின்றன. அதனை உதாசீனப்படுத்தாமல் மக்கள்தான் மிக கவனமாக இருக்க வேண்டும்.

சைபர் குற்றம் நிகழ்ந்தால் தாமதிக்காமல் புகார் அளித்தால்தான் துரிதமாக பணத்தை மீட்க முடியும். சைபர் குற்றங்கள் தொடர்பாக cybercrime.gov.in என்கிற இந்திய அரசின் இணையதளத்தில் புகார் பதிவு செய்யலாம். 1930 என்கிற கட்டணமில்லா எண்ணிலும் அழைத்து புகார் அளிக்கலாம்.

மக்களே ஏமாந்து விடாதீர்கள், கவனமாக இருங்கள்.

படிக்க வேண்டும்

spot_img