சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள சிறிய கிராமம் கீழடி. கடந்த 2014ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை இங்கு ஆய்வை தொடங்கியது.
110 ஏக்கர் பரப்பளவு கொண்ட கீழடி பகுதியில் வெறும் 50 சென்ட் இடத்தில் மட்டும்தான் அகழாய்வு செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் கூட இந்த அகழாய்வின் போது கி.மு 3ம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 10ம் நூற்றாண்டு வரையிலான தமிழர்களின் வாழ்க்கை முறையை தெரியப்படுத்தும் ஏராளமான பொருட்கள் கிடைத்தன.
அதிலும் கீழடியில் கிடைத்திருப்பது நகர நாகரீகம் தொடர்புடைய பொருட்கள் ஆகும். அதாவது கிட்டத்தட்ட 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே தமிழன் நகர நாகரீகத்தை கொண்டிருந்தான் என்பதற்கு சான்றாக கீழடி அகழாய்வு இருந்து வருகிறது.
இதுவரை நடந்த 7ம் கட்ட அகழாய்வில் இருந்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கீழடியில் கிடைத்த தொன்மையான பொருட்களில் இரண்டை அமெரிக்காவிற்கு அனுப்பி அதன் காலத்தையும் தொல்லியல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தமிழர்கள் வரலாறு மிகவும் தொன்மையானது என்றும் கண்டறிப்பட்டுள்ளது.
தமிழர்கள் பண்டைய நாகரீகத்தினர் என்பதற்கான அசைக்க முடியாத தொல்லியல் சான்றுகள் இந்த கீழடியில்தான் உள்ளன. கீழடியில் நடக்கும் அத்தனை அகழாய்வுகளும் உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்நிலையில் கீழடி 8-ம் கட்ட அகழாய்வுப் பணியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.
கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் கிடைத்த அப்பொருட்களின புகைப்படங்களை தேசிய அளவில் கொண்டு செல்ல திமுக அரசு முனைந்துள்ளது. இதன்மூலம் தமிழ்மொழி, மற்றும் தமிழர்களின் வரலாற்றுப் பெருமைகள் பறைசாற்றப்படும்.
கீழடியின் 8ம் கட்ட அகழாய்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்நாள், தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்வைத் தரும் பொன்னாள் அன்றோ? தமிழுக்கும் தமிழர் பண்டைய வரலாற்றுக்கும் ஏற்றம் தரும் நாள் என்றால் மிகையாகாது.
இனி, இந்திய வரலாற்றை கீழடியில் இருந்துதான் துவங்க வேண்டும் போலிருக்கிறது!



