மக்களாட்சியின் தொடக்க பள்ளியே உள்ளாட்சித் தேர்தல் தான். தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 22ம் தேதி வாக்குகளை எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன.
பல ஆண்டுகளாக ஊராட்சி மன்றங்களுக்கும், மாநகராட்சி, நகராட்சி அமைப்புகளுக்கும் அ.தி.மு.க.வின் ஆட்சி காலத்தில் தேர்தல் நடத்தப்படாமல், தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டே வந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு, சென்ற சில வாரங்களுக்கு முன்பு ஊராட்சி மற்றும் மாவட்ட கவுன்சில் அமைப்புகள் போன்றவைகளுக்கு உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டன.
இப்போது அடுத்த கட்டமாக, நகராட்சிகள் – மாநகராட்சிகளுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு, வேட்பாளர்கள் களத்தில் இறங்கி விட்டனர். கட்சிகளின் தலைவர்களும் வேட்பாளர்களும் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
இப்போது 8 அணிகளாக கட்சிகள் தனித்தனியே குறிப்பாக எதிர்க்கட்சி அணிகளில் இருந்தவர்கள் பிரிந்து தனியே போட்டியிடுகின்றனர். இதுவும் நல்லதே. எந்த கட்சிக்கு எவ்வளவு பலம் என்பதை சோதிக்க இந்த தேர்தல் ஒரு வாய்ப்பாக இருக்கட்டும்.
அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி இல்லை. ‘நாங்கள் தனியே நிற்கப் போகிறோம்‘ என்பது வரவேற்கத்தக்கதே. அக்கட்சிக்கு எத்தனை சதவீத வாக்குகள் தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். பாஜக தன் பெயரை நிலைநாட்டும் அளவிற்கு வாக்குகளைப் பெற்றிட முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. நிலையோ சட்டப் பேரவைத் தேர்தலில் வாங்கிய வாக்கு சதவீதத்தையாவது எட்டிப்பிடித்து விடவேண்டும் என்பதற்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. கூடுதல் கனமான பா.ஜ.க.வை தூக்கிச் சுமப்பது இத்தேர்தலில் இல்லை என்றாலும் மற்றபடி கூட்டணி தொடரும் என்று அவசர கதியில் அறிவித்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் தானே அதிமுக இருக்கிறது. ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் வரிந்து கட்டிக் கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதே நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் வித்தியாசமாக தனது பிரசாரத்தை கையிலெடுத்திருக்கிறார். அரசின் அனைத்து துறைகளிலும் கடந்த எட்டு மாத தி.மு.க. ஆட்சி முத்திரை பதித்துள்ளது. அதிமுக காலி செய்து வைத்திருந்த கஜானாவுடன் பதவியேற்றது மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு. முந்தைய அரசு வாங்கிய கடன் சுமைகளும், நிதிப் பற்றாக் குறையும் கழுத்தை நெரிக்கும் அளவிற்கு இருந்தாலும் பொருளாதார நிபுணர்களின் வழிகாட்டுதலில், அதனைச் சிறப்பாக எதிர் கொண்டு வருகிறது. இதன் மூலம் இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக பார்க்கப்படுகிறார், மு.க.ஸ்டாலின். தமிழகம் தங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்வதாக பிற மாநிலத்தவர்களே பாராட்டுகின்றனர்.
இதையெல்லாம் சீர்தூக்கிப்பார்த்து, உள்ளாட்சிகளில் நல்லாட்சி தொடர யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சிந்தித்து முடிவெடுங்கள்.
உள்ளாட்சிகளிலும் நல்லாட்சி தொடரட்டும்!



