fbpx
Homeதலையங்கம்குடிநீர்த் திட்டத்தில் அரசியல் வேண்டாம்!

குடிநீர்த் திட்டத்தில் அரசியல் வேண்டாம்!

ரூ.4,600 கோடியில் இரண்டாம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வழக்கம் போல இதற்கும் உடனடியாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது கர்நாடகம்.

இந்த திட்டம் காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்கும் தண்ணீரைக் கொண்டு தான் செயல்படுத்தப்பட உள்ளது.

அதாவது, நம் வீட்டில் சேமித்த நீரைப் பயன்படுத்தி நாம் சமையல் செய்தால் பக்கத்து வீட்டுக்காரரால் எப்படி தடுக்க முடியும்? அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? அதைப்போலத்தான், காவிரி நீர் பங்கீடு குறித்து எந்த புரிதலுமின்றி பேசி இருக்கிறார், கர்நாடக அமைச்சர் கர்நோல்.

இரண்டாம் கட்ட ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்காக காவிரியில் இருந்து தண்ணீர் எடுப்பது, காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் எதிரானது என்று கர்நாடக அமைச்சர் கர்நோல் கூறி இருப்பது அபத்தமானது.

ஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீரில் புதுச்சேரிக்கான 7 டி.எம்.சி. தவிர மீதமுள்ள தண்ணீர் முழுவதும் தமிழகத்துக்கே சொந்தமானது. தமிழகத்துக்கு வழங்கப்படும் நீரை பாசனம், குடிநீர் தேவைக்காக எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை காவிரி நடுவர் மன்றமும் உச்சநீதிமன்றமும் மத்திய அரசும் பல தருணங்களில் உறுதி செய்திருக்கின்றன.

அதன்படி தனக்குச் சொந்தமான நீரைக் கொண்டு இரண்டாம் கட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தமிழ்நாடு செயல்படுத்தும்போது அதில் தலையிட கர்நாடகத்துக்கு எந்த உரிமையும் இல்லை; தலையிடவும் முடியாது.

இதனைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்து தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலடி தந்துள்ளார். மனிதாபிமான அடிப்படையிலும் சரி, சட்டப்பூர்வமான அடிப்படையிலும் சரி, இரண்டாம் கட்ட ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றும் உரிமை தமிழகத்துக்கு உண்டு என்றும் திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் துரைமுருகன் ஆணித்தரமாக கூறி இருக்கிறார்.

இந்த உண்மையை எல்லாம் மறைத்துவிட்டு, ஒகேனக்கல் 2வது கூட்டுக் குடிநீர் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என கர்நாடகம் கூறுவதில் அரசியலைத் தவிர வேறொன்றுமில்லை.

இந்த விவகாரத்தில் எந்த நீதிமன்றத்துக்குப் போனாலும் காவிரி நடுவர் மன்றத்தில் அல்லது மத்திய அரசிடம் முறையிட்டாலும் நியாயமும் தர்மமும் தமிழகத்தின் பக்கமே என்பதில் ஐயமில்லை.

எனவே, இந்த திட்டத்துக்கு எந்த முட்டுக்கட்டையும் போடாமல் கர்நாடகம் விலகி இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசும் கர்நாடகத்தின் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் இரண்டாம் கட்ட ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும்.

மனிதாபிமானமே இல்லாமல், குடிநீருக்காக இரு மாநிலங்களிடையே மோதல் போக்கு ஏற்பட்டால் அதைவிடக் கேவலம் வேறு என்ன இருக்க முடியும்?

படிக்க வேண்டும்

spot_img