டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழ்நாட்டு அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து கடிதம் எழுதியுள்ளார்.
அலங்கார ஊர்திகளை நிபுணர்கள் குழு தேர்வு செய்வதாகவும், தமிழகத்தின் ஊர்தி முதல் மூன்று சுற்று சந்திப்புகளில் இடம்பெற்றது, ஆனால் அந்த ஊர்தியால் இறுதிச்சுற்றுக்கு தேர்வாக முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலினோ, அலங்கார ஊர்திக்கான வடிவமைப்பு மாதிரிகள் மத்திய அரசின் நிபுணர் குழு முன்பு சமர்ப்பிக்கப்பட்டு மூன்று முறை அவர்கள் சொன்னத் திருத்தங்களை செய்ததாகவும், 4வது கூட்டத்திற்கு எந்த ஒரு காரணமுமின்றி அழைக்காததோடு எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்து விட்டு தற்போது நிராகரிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருப்பது வேதனை தருவதாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த குளறுபடிக்கு யார் பொறுப்பு?. 4வது கூட்டத்திற்கு முறையாக அழைப்பு வந்திருந்தால் டெல்லி குடியரசு தினவிழாவில், ஆங்கிலேயர்களை தீரமுடன் எதிர்கொண்ட நமது சுதந்திர போராட்ட வீரர்களின் புகழை பறைசாற்றும் தமிழக ஊர்தி பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் அல்லவா?.
இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய பாதுகாப்புத்துறை விளக்கத்தில் பதில் இல்லையே, ஏன்? அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விளக்கத்துக்கு ஓர் விரிவான விளக்கத்தை தமிழக மக்களின் குமுறலை வெளிப்படுத்தும் வகையில் பதிலாக தந்து விட்டார், முதல்வர் மு.க.ஸ்டாலின். அதோடு வாதத்துக்கு முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டார்.
நிராகரிக்கப்பட்ட தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி தமிழக அரசின் சார்பில் சென்னையில் நடக்கவிருக்கும் குடியரசு தினவிழாவில் பவனி வரும் என்ற அறிவிப்போடு, தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும் அந்த அலங்கார ஊர்தி மக்கள் பார்வைக்காக அனுப்பப்படும் என்றும் முதல்வர் அறிவித்து உள்ளார்.
ஆம்; இதன்மூலம் ஊர்தியில் இடம்பெற்றுள்ள சுதந்திர போராட்ட வீரர்களுக்கு முன்னதாகவே மரியாதையும் செலுத்திவிட்டார்.
மத்திய பாதுகாப்புத்துறை நிபுணர் குழு இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவில்லை என்றே தோன்றுகிறது. இனி வரும் காலங்களில் இந்த முரண்பாடுகள் களையப்பட வேண்டும். மொழி, இன ரீதியான பிரச்சினையாக உருவெடுத்து விடக்கூடாது.
ஆர்வம் காட்டும் அனைத்து மாநில அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பில் பங்கேற்கும் வகையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் களம் கண்ட சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக வரலாற்றை நாம் சொல்லித்தானே ஆக வேண்டும். சொல்லாமல் இருக்க முடியுமா?. அந்த கடமையைத்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்திருக்கிறார்.
தமிழக முதல்வர் அவர்களே, சபாஷ்!



