இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். அதனை தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அதில், அணியை சரியான திசையில் கொண்டு செல்ல ஏழு வருட கடின உழைப்பை செலுத்தி, இடைவிடாத முயற்சியுடன் தினமும் போராடினேன்.
இப்போது பதவியில் இருந்து ஒதுங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது, என்று கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் டெஸ்ட், சர்வதேச ஒருநாள் போட்டி, சர்வதேச டி20 என எல்லா போட்டிகளிலும் கேப்டனாக கோலி இருந்தார்.
இதுவரை இந்தியாவின் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த அவர் தற்போது அந்த பதவியில் இருந்து விலகியிருக்கிறார். கேப்டன் பொறுப்பில் ஒருவர் செய்த சாதனைகளை தரவுகளினைத் தராசிலிட்டும் விளக்கலாம், அதையும் தாண்டி அவர்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் துணைகொண்டும் தெளிவுபடுத்தலாம்.
அப்படிப்பட்ட எந்த அளவீடுகளைக் கொண்டு அளந்தாலும் அளப்பறியதுதான், இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி எட்டியுள்ள உயரங்கள்.
ஏழாண்டுகளுக்கு முன்பு ஏழாவது இடத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த ஓர் அணிதான் அவரது கைகளில் கொடுக்கப்பட்டது.
அணியினை அங்கிருந்து உந்தித் தள்ளி, 42 மாதங்கள் தொடர்ச்சியாக முதலிடத்தில் இருக்க வைக்கும் மகா சாதனையை கோலி நிகழ்த்திக் காட்டினார்.
அதுவரை வெற்றியின் விலாசத்தை பூதக் கண்ணாடி கொண்டு தேடிக் கொண்டிருந்த இந்தியாவுக்கு, அதன் இருப்பிடத்தைக் காட்டியது மட்டுமின்றி, அங்கேயே கோட்டை கட்டி, சிம்மாசனமிட்டு அமர வைத்ததும் கோலியினால் மட்டுமே சாத்தியமாகியது.
இதுவரை அதிக டெஸ்ட் போட்டிகளுக்குத் தலைமையேற்றுள்ள இந்தியக் கேப்டனும் கோலிதான் (68 போட்டிகள்). அதில் அதிகப் போட்டிகளில் வென்றதற்கான வெற்றி சதவிகிதத்தை (58.8%) வைத்திருக்கும் இந்தியக் கேப்டனும் அவரேதான்.
சர்வதேச அளவில் டெஸ்டில் வெற்றி, தோல்வி விகிதத்தை அதிக அளவில் வைத்துள்ள கேப்டன்களின் பட்டியலில் ஸ்டீவ் வாக்குக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் கோலிதான் இருக்கிறார். அதிலும் அவர் பெற்றுத்தந்துள்ள பெரும்பாலான வெற்றிகள் பிரமாண்டமானவை.
அந்த 40 போட்டிகளில், இந்தியா 16 போட்டிகளில் 200-க்கும் அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கோலிக்கு அடுத்தபடியாக அதிகமுறை 200க்கும் அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் அணியை வெல்ல வைத்த கேப்டன்கள் பட்டியலில் உலக அளவிலேயே பாண்டிங்தான் (10 முறை) இருக்கிறார்.
குறிப்பாக ஹோம் கிரவுண்டில் கில்லியாகவே கோலி வலம் வந்தார். ‘ரன் மிஷின்’ என்று கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட கோலியின் தலைமையில் இந்தியாவில் நடைபெற்ற எந்த டெஸ்ட் தொடரையும் இந்தியா இழந்ததில்லை, மொத்தமே இரண்டு போட்டிகளில் மட்டுமே தோற்றிருக்கிறது.
எனினும், அதையும் தாண்டி அந்நிய மண்ணிலும் அணியைக் கோலோச்ச வைத்தது கோலிதான். வெளிநாடுகளில் போட்டிகளை மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாய் வென்று கொண்டிருந்த இந்தியாவிற்கு ஆஸ்திரேலியாவில், இங்கிலாந்தில் தொடர் வெற்றியின் சுவை எப்படி இருக்குமெனக் காட்டினார்.
அப்படிப்பட்ட கோலி இன்று டெஸ்ட் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலகி இருக்கிறார். இதனை ஒரு சிறு இழப்பாகத்தான் அவர் எதிர்கொள்வார். ஆனால் அது இந்திய அணிக்கு பேரிழப்பாகத் தான் இருக்கும்.
அது தான் உண்மை. அவரது விலகல் கோடான கோடி கிரிக்கெட் ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்கு இனி இரட்டை கேப்டன்கள் இருப்பார்கள். சர்வதேச ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் கோலியே கேப்டனாக நீடிப்பார் என்பதில் ஆறுதல் கொள்வோம்!
வெற்றிப் பயணம் தொடரட்டும்!



