fbpx
Homeதலையங்கம்மதுரை ‘எய்ம்ஸ்’: பிரதமர் மோடி வாய் திறப்பாரா?

மதுரை ‘எய்ம்ஸ்’: பிரதமர் மோடி வாய் திறப்பாரா?

கடந்த 2014-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை கடந்த மாதம் 7-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

அதுபோல், 2003-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட போபால், புவனேஸ்வர், ஜோத்பூர், பாட்னா, ராய்பூர், ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைகள் 2012-ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்தது. அதன்பிறகு 2009-ல் அறிவித்த ரேபரேலி, 2014ல் அறிவித்த மங்களகிரி (ஆந்திரா), நாக்பூர் (மகாராஷ்டிரா), படிண்டா (பஞ்சாப்), கல்யாணி (மேற்கு வங்கம்) ஆகிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பாட்டிற்கு வந்தன.

இதன் பிறகு அறிவித்த மருத்துவமனைகளும் சேர்த்து இதுவரை நாடு முழுவதும் 18 எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

ஆனால், 2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமானப் பணிகள் இன்னும் மதுரையில் தொடங்கப்படவில்லை. எம்பிபிஎஸ் மருத்துவ மாணவர்கள் சேர்க்கையும் தொடங்கப்படவில்லை. கட்டுமானப் பணிக்கு உரிய நிதி கூட ஒதுக்கப்படவில்லை.

இவ்வளவுக்கும் பிரதமர் மோடியே நேரடியாக மதுரை தோப்பூருக்கு வந்து கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.

பிரதமரே நேரடியாக வந்து அடிக்கல் நாட்டியதால் உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது வரை அந்த எதிர்பார்ப்பு நடக்கவில்லை. நாடு முழுவதும் அமைக்கப்படும் பிற மாநில ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகளுக்கு பாஜக அரசு நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்த நிலையில், மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பான் நாட்டின் ஜெய்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன் பணிகள் தொடங்கப்படும் என்று அறிவித்தது.

போதிய நிதி ஒதுக்காததால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் ஆமை வேகத்தில் கூட நகரவில்லை. இந்த நிலையில் 2021 சட்டசபை தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி மதுரைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தார்.

அப்போதும் பட்டும்படாமலே ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை பற்றி பேசிச் சென்றார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில் வரும் 12-ம் தேதி மதுரையில் நடக்கும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க மீண்டும் வருகிறார்.

அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனை பிரச்சினையை நினைவூட்டும் வகையில் மதுரையில் நாளை ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக தென் மாவட்ட அனைத்துக்கட்சி எம்பிக்கள் அறிவித்துள்ளனர்.

மதுரையில் பிரதமர் பங்கேற்கும் விழா, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய இடத்திலேயே நடக்கிறது.

அதனால், பிரதமர் மோடி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவுபடுத்துவதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்ப்போம்.

வாய் திறப்பாரா, பிரதமர் மோடி?

படிக்க வேண்டும்

spot_img