fbpx
Homeதலையங்கம்தமிழ்த்தாய்க்கு முதல்வர் சூட்டிய புதிய மகுடம்

தமிழ்த்தாய்க்கு முதல்வர் சூட்டிய புதிய மகுடம்

‘நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்…’ எனத்தொடங்கும் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாநிலப் பாடலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதனை தொடர்ந்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாட வேண்டும், அதனைப் பாடும்போது மாற்றுத்திறனாளிகளைத் தவிர மற்ற அனைவரும் தவறாது எழுந்து நிற்க வேண்டும் என்று அரசாணை பிறப்பித்துள்ளது தமிழக அரசு.

தமிழ் மொழியின் உயர்வுக்கு பெருமை தரக்கூடிய சிறப்புச் செய்தியாக இது கருதப்பட்டாலும், இதற்கு பின்னால் ஓர் சர்ச்சையும் கிளம்பியது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது கட்டாயம் எழுந்து நிற்க வேண்டுமா, வேண்டாமா? என்ற அந்த சர்ச்சையில் காஞ்சி மடாதிபதியும் சிக்கினார்.

வாதப் பிரதிவாதங்களுக்கு இடம்தராமல் இதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது, தமிழக அரசின் அரசாணை. இனி எல்லோரும் எழுந்து நின்றே ஆக வேண்டும். இந்த அரசாணைக்கு வரவேற்பும், பாராட்டும் குவிந்து வருகின்றன.

மேற்கண்ட தமிழ் வாழ்த்துப் பாடல் முழுவதையும் ஏற்காமல், ஏன் சில வரிகளைத் தவிர்க்க வேண்டும்? என்பதும் ஒரு சிலரால் கேள்வி கேட்கப்படுகிறது. தமிழ்த்தாய் வாழ்த்தில் தமிழ்த்தாயின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கும் பகுதி மட்டுமே எடுத்தாளப்பட்டுள்ளது.

பிற மொழிகளை பழித்துக் கூறும் நாலைந்து வரிகளை நீக்கியது வரவேற்கத் தக்கது தானே. அன்றே இதுகுறித்து விளக்கமும் தரப்பட்டுள்ளது.

தமிழறிஞர் டாக்டர்.மு.வரதராசனார், ‘நாடும் மொழியும் ஒருங்கே போற்றப்படும் சிறப்புக்குரிய தமிழ்த்தாய் வாழ்த்து’ என்று வழிமொழிந்தார்.

பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார், கரந்தை தமிழ்ச்சங்கத்தை உருவாக்கிய தமிழ்வேள் உமாமகேசுவரனார், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் போன்ற தமிழ் அறிஞர்கள் எல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் கரும்பாக இருக்கிறது என சொல்லி மகிழ்ந்தனரே. இதைவிட வேறென்ன வேண்டும்? இனி வீண் வாதங்கள் தேவையில்லை.

தமிழ்த்தாய் வாழ்த்தை மனப்பாடமாக பாடத்தெரியாத மாணவ, மாணவிகள் கூட இருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். தமிழராய் பிறந்த ஒவ்வொருவரும் தமிழ்த்தாய் வாழ்த்தை மனப்பாடமாக பாடத் தயாராக வேண்டும். பாடலின் பொருளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்த்தாய் வாழ்த்தை அறிமுகப்படுத்தியது அப்போதைய முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். தந்தையின் வழியில் தனயன் – இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்த்தாய் வாழ்த்தை வாயால் பாட உத்வேகம் அளித்திருக்கிறார்.

தமிழ்த்தாய்க்கு புதிய மகுடம் சூட்டியிருக்கிறார். வரலாறு எப்போதும் அதை சொல்லும்!

படிக்க வேண்டும்

spot_img