பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு ஆகும் செலவு பஸ், டாக்சி, ஆட்டோ போன்றவற்றில் பயணம் செய்வதற்கான செலவு, டிராக்டர், பம்ப் செட்களுக்கு டீசல் பயன்படுத்தும் செலவு, தொழிற்சாலைகளின் மின்சார சாதனங்களுக்கு ஆகும் செலவு, பொருட்களை டெலிவரி செய்யும் சேவைத்துறையில் ஆகும் செலவு, வீடுகளில் ஒளிரும் மின் சாதனங்களுக்கு ஆகும் செலவு என்று எல்லா பொருட்களின் விலை உயர்வுக்கும் இது வழி வகுக்கிறது.
பெட்ரோல், டீசல் மீதான வரிகள் மேல் வரிகள் இறக்குமதி வரி என்பதால் இதனால் ஏற்படும் விளைவு எல்லா பொருட்களின் விலையிலும் விண்ணுக்கு கொண்டு சென்றுவிடுகின்றன.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோல், டீசலுக்கான கச்சா எண்ணெய் மீது மத்திய அரசு அடிப்படை கலால் வரி, சிறப்பு கூடுதல் கலால் வரி என்று போடுவதோடு நிற்காமல், விவசாய உள்கட்டமைப்பு, மேல்வரி என்று பல வரிகளை விதிக்கிறது.
மாநில அரசுகளும் தன் பங்குக்கு வரி வசூலிக்கிறது.
விவசாய உள் கட்டமைப்பை பெருக்குவதற்கும், சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் மத்திய அரசாங்கம் தன் நிதியில் இருந்து தான் செலவழிக்க வேண்டுமே தவிர, பெட்ரோல், டீசல் மீது மேல் வரியை விதித்து, அதை சாதாரண பாமர மக்கள் தலையில் சுமத்துவது சரி அல்ல. மேலும் இந்த மேல் வரியில் மாநில அரசுகளுக்கும் பங்கு இல்லை.
பெட்ரோல் மீது ஒரு லிட்டருக்கு ரூ.33ம், டீசல் மீது ஒரு லிட்டருக்கு ரூ.32ம் மேல்வரி விதிக்கப்பட்டு மத்திய அரசாங்கம் ஆண்டுக்கு ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் கோடி வசூலிக்கிறது என்று ப.சிதம்பரம் கூறியிருக்கிறார்.
ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக சில காலத்திற்கு மட்டுமே மேல்வரி விதிக்கப்பட வேண்டும் என்பது இப்போது நடைமுறையில் இல்லை. தொடர்ந்து விதிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.
இப்போதைய சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான மேல்வரியை ரத்து செய்து இறக்குமதி வரிகளை ரத்து செய்து, அல்லது குறைத்து எல்லா பொருட்கள் மீதான சரக்கு சேவை வரியையும் சற்று குறைத்தால் விலைவாசி குறையும்.
மக்களும் நிம்மதி பெருமூச்சு விட முடியும்.
இது குறுகிய கால தீர்வு தான்.
ஆனால் நீண்டகால தீர்வு பெட்ரோல்-டீசலுக்கு பதிலாக மாற்று எரிபொருள் பயன்பாட்டுக்கு வருவது தான்.



