fbpx
Homeதலையங்கம்21ம் நூற்றாண்டிலுமா இந்த சாதிக்கொடுமை?

21ம் நூற்றாண்டிலுமா இந்த சாதிக்கொடுமை?

21ம் நூற்றாண்டிலும் சாதியால் நடக்கும் கொடுமைகள் நாடு முழுவதும் ஓய்ந்த பாடில்லை. அம்பேத்கர் சொன்னது போல் சாதி என்பது வெறும் சமூக பிரச்சனை என்பதை தாண்டி மனநோய் என்பது நாளுக்கு நாள் நடக்கும் சம்பவங்களால் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

சாதி காரணமாக ஆணவக் கொலை நாடு முழுவதும் நடப்பதைப் பார்க்கிறோம். தாழ்த்தப்பட்ட சாதியினரை ஆலயங்களில் நுழையவிடாமல் தடுக்கும் போக்கு தலைதூக்கி உள்ளது.

தமிழ்நாட்டில் சமீபத்தில் தான் வேங்கைவயல் என்ற கிராமத்தில் சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியில் யாரோ மலத்தை கலந்து விட்டார்கள் என்று பெரும் பிரச்சனை வெடித்தது.

குறிப்பாக இந்த மனிதநேயமற்ற செயலை ஆதிக்க சாதியை சேர்ந்த சிலர்தான் செய்து விட்டார்கள் என்று அந்த பகுதியை சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் கூறி வருகின்றனர். ஆனாலும், இன்று வரையிலும் யாரும் கைதாகவில்லை.

மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியின இளைஞர் ஒருவர் மீது ஆதிக்கசாதியை சேர்ந்தவர் என்று சொல்லப்படும் ப்ரவேஸ் ஷுக்லா என்பவர் சிறுநீர் கழித்து மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்ட காட்சிகள் இணையத்தில் வீடியோவாக பரவி வருகிறது.

வைரலாக பரவும் அந்த வீடியோவில் அமர்ந்திருக்கும் அந்த பழங்குடியின இளைஞர் முகம், தலையில் ப்ரவேஸ் சிறுநீர் கழிப்பது தெளிவாக பதிவாகியுள்ளது. ப்ரவேஸ் பாஜக எம்எல்ஏ கேதார்நாத் சுக்லாவின் பிரதிநிதியாக வலம் வருகிறார்.

அவர் பாஜக அரசியல் பின்னணி கொண்டவர் என்பதால் பாதிக்கப்பட்டவர் தரப்பில் போலீசில் புகார் செய்யப்பட வில்லை.

ஆனால் வலைதளங்களில் வீடியோ வைரலானதால் சம்மந்தப்பட்ட குற்றவாளி மீது எஸ்சி & எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும், மேலும் பல்வேறு பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் மூன்று மாதங்களுக்கு முன்பே நடந்துள்ளது. தற்போது இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து கடும் எதிர்ப்பும், விமர்சனமும் கிளம்பியுள்ளது.

அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் உத்தரவிட்டுள்ளது ஆறுதலான விஷயம்.

சாதி வெறியர் ப்ரவேஸ் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொந்தளிப்பான குரல் நாடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் இது போன்ற சாதிக் கொடுமைகள் ஒழிய இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தேவையோ?

படிக்க வேண்டும்

spot_img