fbpx
Homeதலையங்கம்விவசாயிகளுக்கு பிரதமர் சூட்டிய வெற்றி மாலை

விவசாயிகளுக்கு பிரதமர் சூட்டிய வெற்றி மாலை

விவசாயிகளுக்கு பிரதமர் சூட்டிய வெற்றி மாலை
நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயம் தொடர்பான 3 சட்ட மசோதாக்களை தாக்கல் செய்தார்.

காங்கிரஸ், திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளின் எதிர்ப்பை மீறி இந்த மசோதாக்கள் மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன.
இதனை கண்டித்தும், 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரியும், டெல்லி எல்லையில் பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேச விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் 27ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
டெல்லி விவசாயிகள் போராட்டம் இன்றுடன் 12 மாதங்களை தொட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி, ‘மூன்று வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படுகிறது.

போராட்டத்தை திரும்பப் பெற்று அனைவரும் வீடு திரும்புங்கள்’ என்று திடீரென அறிவித்துள்ளார். நாட்டு மக்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார், பிரதமர் மோடி.
இது விவசாயிகளின் ஓராண்டு கால இடைவிடாத போராட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

ஆனால் இந்த போராட்டத்தில் பலநூறு விவசாயிகள் தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்திருக் கிறார்கள். விடாப்பிடியாக இருந்து வந்த மத்திய அரசு இப்போது பணிந்திருக்கிறது.

போராடிய விவசாயிகளுக்கு தாங்க முடியாத இன்னல்களை தந்துவிட்டு, தாமதமாக… மிக மிக தாமதமாக வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றாலும் பிரதமர் மோடியின் வாபஸ் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டக் களத்தை விட்டு செல்ல மாட்டோம் என்று சூளுரைத்த விவசாயிகளுக்கு வணக்கம் செலுத்துவோம். மக்கள் சக்தி, கோட்டை கதவுகளை விட வலிமையானது என்பதை நிலைநாட்டி விட்டனர்.

பஞ்சாப், உ.பி., உள்பட 5 மாநில தேர்தலுக்காகவே வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி வாபஸ் பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினாலும், கிடைத்த வெற்றிக்கு முழு காரணம் விவசாயிகளின் போராட்டம் தான்.

ஜனநாயக நாட்டில் நியாயமான போராட்டத்துக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்பதை விவசாயிகள் நிரூபித்திருக்கின்றனர். போராட்டக்களத்தில் உயிர்நீத்தவர்களின் தியாகம் என்றென்றும் சுடர் வீசும்.

படிக்க வேண்டும்

spot_img