ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் அறுவடைக்குப் பின் இரண்டாம் போகமாக உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு போன்ற பயறு வகை பயிர்கள், நிலக்கடலை, எள், பருத்தி ஆகிய பயிர்களில் இதுவரை இல்லாத அளவிற்கு 10,043 ஹெக்டேர் இரண்டாம் போக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,35,886 ஹெக்டேர் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
நாட்டின் ஒட்டுமொத்த சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில், வேளாண்மை முக்கியப் பங்கு வகிக்கிறது.
மக்களின் வாழ்வாதாரமாக திகழ்ந்து உணவு அளிப்பதோடு, வேலை வாய்ப்பளித்தல், தொழில்துறை முன்னேற்றம்,பன்னாட்டு வாணிபம், வறுமை ஒழிப்பு எனப்பல்வேறு இனங்களிலும் வேளாண்மை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
வாழ்வாதாரம்
தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் மக்களுக்கு வேளாண்மைத் தொழிலே வாழ்வாதாரமாக இருந்து வருகிறது என்பதால் தமிழக அரசு, வேளாண் தொழிலுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு வேளாண் தொழிலினை மேம்படுத்தி வேளாண் பெருமக்களின் உயர்விற்காக பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
நவீன தொழில்நுட்பங்கள்
தமிழ்நாட்டில் நிலவும் தட்பவெப்பம், மழையளவு, மண்வளம் ஆகியவற்றிற்கேற்ப பயிர் இரகங்களும், உற்பத்தியை பெருக்கிட நவீன தொழில்நுட்பங்களும் பரிந்துரைக்கப்படுகின்றன. ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வேளாண்மைத் தொழிலே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
தமிழகத்தில் குறிப்பாக பெரும்பாலான கிராமப்புற மக்களுக்கு வேளாண்மைத் தொழிலே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. வேளாண்மையில் அதிக உற்பத்தியை அடைய, விவசாயிகளுக்குத் தேவையான பயிர்வாரியான/பகுதிவாரியான உத்திகளை வகுத்து, கிராமப்புறங்களில் வேளாண் தொழிலுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் அறுவடைக்குப் பின் இரண்டாம் போகமாக உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு போன்ற பயறு வகை பயிர்கள், நிலக்கடலை, எள், பருத்தி ஆகிய பயிர்களில் இதுவரை இல்லாத அளவிற்கு 10,043 ஹெக்டேர் இரண்டாம் போக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
சாதனை
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,35,886 ஹெக்டேர் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இங்குள்ள மண் மற்றும் சமூக சூழ்நிலையின் அடிப்படையில் இரண்டாம் போக பயிர் சாகுபடி செய்ய சாதகமாக உள்ள இடங்களில் விவசாயிகளை ஊக்கப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இரண்டாம் போகம் பயிர்கள் சாகுபடி செய்து சாதனை செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் போக சாகுபடியில் சிறுதானியங்கள் 15 ஹெக்டரிலும், உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு, மின்னிப்பயறு போன்ற பயறு வகைகள் 1342 ஹெக்டரிலும், நிலக்கடலை 369 ஹெக்டரிலும்,எள் 1290 ஹெக்டரிலும், சூரியகாந்தி 18 ஹெக்டரிலும், பருத்தி 7009 ஹெக்டரிலும் என மொத்தம் 10043 ஹெக்டர் பரப்பளவில் மாவட்ட அளவில் ஒத்திசைவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாம் போக பயிறு சாகுபடி செய்தமையால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாயும், கால்நடைகளுக்கு தீவனமும் கிடைத்தது மற்றும் மண்வளமும் பாதுகாக்கப்பட்டுள்ளது.
“220 கிலோ மகசூல் கிடைத்தது”
இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த ராமநாதபுரம் மாவட்டம், இராஜசிங்கமங்கலம் தாலுகாவைச் சேர்ந்த தாஸ் தெரிவித்ததாவது:
எனது கிராமத்தில் சொந்தமாக 4 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த 30 வருடங்களாக நெல் விவசாயம் செய்து வருகிறேன். நெல் விவசாயத்தில் ஒரு போகம் விளைச்சலில் மிகக்குறைந்த அளவே வருமானம் கிடைக்கிறது.
எங்கள் பகுதியில் வேளாண்மைத்துறை மூலம் நடைபெற்ற வேளாண்மைத்துறை பயிற்சியில் கலந்து கொண்டபோது, நெல் சாகுபடிக்குப் பின் பயிறு சாகுபடி செய்வதன் மூலம் மண்வளம் அதிகரிக்கிறது. கூடுதல் வருமானம் கிடைக்கிறது என தெரிந்து கொண்டேன்.
உடனே நான் வேளாண்மை விரிவாக்க மையத்திலிருந்து 8 கிலோ உளுந்து விதைகளை வாங்கி 1 ஏக்கரில் விதைப்பு செய்தேன். 75 நாட்களிலேயே அறுவடைக்கு வந்தது.
மொத்தம் 220 கிலோ மகசூல் கிடைத்தது. இதனால் எனக்கு கூடுதலாக 20,000 ரூபாய் வருமானம் கிடைத்தது. மண்வளம் பாதுகாக்கப்பட்டது. எந்த ஒரு செலவும் இல்லாமல் மானாவாரியில் வருமானம் கிடைக்க வழிவகை செய்த தமிழக முதல்வருக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
“300 கிலோ உளுந்து பெற்றேன்”
இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம் தெளிச்சாந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் தெரிவித்ததாவது:
நான் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், தெளிச்சாந்தநல்லூர் கிராமத்தில் நெல் விவசாயம் செய்து வருகிறேன். நான் கடந்த 30 வருடங்களாக வடகிழக்கு பருவமழையினால் நெல் விவசாயம் மட்டும் செய்து வந்தேன்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் நெல்லை தொடர்ந்து இரண்டாம் போக சாகுபடியாக 1 ஏக்கர் நிலத்தில் உளுந்து (வம்பன்-8) சாகுபடி செய்தேன். என்னுடைய நிலத்தில் 300 கிலோ உளுந்து கிடைத்தது.
மண்வளம் பாதுகாக்கப்பட்டது. அதனால் எனக்கு கூடுதல் வருமானமாக எனக்கு ரூ.24,000/- கிடைத்தது. எனக்கு கூடுதல் வருமானம் பெற உறுதுணையாக இருந்த முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
“ஆண்டுதோறும் தொடர்ந்து கடைபிடிப்பேன்”
இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த ராமநாதபுரம் மாவட்டம், சூரங்கோட்டை ஊராட்சி, முதுனாள் கிராமத்தைச் சேர்ந்த பாலு தெரிவித்ததாவது:
நான் கடந்த 40 வருடங்களாக நெல் விவசாயம் செய்து வருகிறேன். எனது வயல் ராமநாதபுரம் பெரிய கண்மாய், நீர் பாசனத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ளது.
சென்ற ஆண்டு பெய்த மிகுதியான மழையினால் பெரிய கண்மாய் முழுவதும் நிரம்பியது. இதனால் நெல் விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைத்தது. கண்மாயில் எஞ்சியுள்ள நீரை பயன்படுத்தி இரண்டாம் போக சாகுபடி செய்யுமாறு வேளாண்துறை அலுவலர்கள் அறிவுறுத்தினர்.
அவர்களின் அறிவுறுத்தலின்படி, நெல் அறுவடைக்குப் பின் இரண்டாம் போகமாக உளுந்து பயிர் சாகுபடி செய்துள்ளேன். வம்பன்-8 ரக உளுந்து விதை மற்றும் உயிர் உரங்கள், வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானியத்தில் வழங்கினார்கள். தற்போது விதைகள் நன்றாக முளைத்து செடிகள் நன்கு வளர்ந்துள்ளன.
இலை வழியாக 2% டி.ஏ.பி கரைசல் தெளித்து வருகிறேன். இதனால் நல்ல மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். இரண்டாம் போகமாக உளுந்து பயர் சாகுபடி செய்வதனால் கூடுதல் வருமானம் கிடைப்பதுடன் மண்வளம் மேம்படும் என்பதால் ஆண்டு தோறும் தொடர்ந்து கடைபிடிப்பேன்.
உளுந்து பயிர் அறுவடை செய்தபின் செடிகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்துவேன். இதனால் தீவன செலவும் எனக்கு குறையும். இரண்டாம் போக சாகுபடி செய்ய வேளாண்மைத் துறையின் மூலம் ஊக்கப்படுத்திய முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
“தட்டைப்பயறு 1 கிலோ ரூ.80”
இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டம் வண்ணாங்குண்டு கிராமத்தைச் சேர்ந்த பிரகலாதன் தெரிவித்ததாவது:
நான் நெல், தென்னை விவசாயம் செய்து வருகிறேன்.
என்னை வேளாண்மைத்துறை அலுவலர்கள் தொடர்பு கொண்டு நெல் அறுவடைக்குப் பின் தட்டைப்பயறு சாகுபடி செய்யுமாறு அறிவுறுத்தினர். அதன்படி தட்டைபயறு வம்பன்-3 ரக விதைகளை மானியமாக வழங்கினர். அதை நான் விவசாயம் செய்தேன்.
இதில் எனக்கு 240 கிலோ தட்டைப்பயறு மகசூல் கிடைத்தது. இதை 1 கிலோ 80 ரூபாய் வீதம் விற்பனை செய்ததில் எனக்கு 19,200 ரூபாய் வருமானம் கிடைத்தது. எனக்கு கூடுதலாக வருமானம் கிடைக்க ஏற்பாடு செய்து பயன்பெற உதவி செய்த முதல்வருக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தொகுப்பு:
சேரா.நவீன்பாண்டியன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.
வா.பெ.வினோத்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
ராமநாதபுரம்.



