fbpx
Homeதலையங்கம்முயற்சியும் முயற்சியின்மையும்

முயற்சியும் முயற்சியின்மையும்

தற்போது தமிழகமெங்கும் வடகிழக்குப் பருவ மழை பலமாகப் பெய்து வருகிறது. அதிலும் சென்னை மாநகரில், 2015ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் பெய்ததை விட அதிக மழை பெய்துள்ளது.

மாநகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முறையான அறிவிப்புக்குப் பின்னர் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போதைய அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரும் வெள்ளப் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

ஆனால், அன்று அதிமுக ஆட்சியின்போது செம்பரம்பாக்கம் ஏரியை அவர்கள் ஒரே இரவில் முன்னறிவிப்பின்றி திறந்து விட்டதால் ஏராளமானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகள், உடமைகளை இழந்து நடுத்தெருவில் நின்றனர்.

வெள்ளத்தடுப்பு நடவடிக்கையில் அன்றைய அரசு போதிய முயற்சியுடன் பணியாற்றவில்லை என்பதற்கு பெருவெள்ளமே எடுத்துக்காட்டாக அமைந்தது.
ஆனால், இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாகக் களத்தில் இறங்கி மழை பெய்யும் பகுதிகளைப் பார்வையிட்டு மீட்புப்பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

இன்று 2வது நாளாக அவர், தண்ணீர் சூழ்ந்த பகுதிகளைப் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார். பாதிப்புகளைச் சீரமைக்க, உடனடியாக உத்தரவுகளைப் பிறப்பித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சி வெற்றி பெற்று இன்னும் ஓரிரு நாட்களில் வெள்ளம் வடிந்து சீராகி விடும் என்றாலும் அரசின் திட்டமிடல்கள் எதிர்பாராத பெருமழையை சந்திக்க, இயற்கை பேரிடரைச் சந்திக்க எப்போதும் தயாராக இருக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

இதன் மீது மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் பருவ காலங்கள் மாறி விட்டன.

பருவ காலத்தில் மட்டுமின்றி, பருவம் தவறி எந்த மாதத்திலும் பெருமழை கொட்டும் நிலை உருவாகி விட்டது என்பதை மறந்து விடக்கூடாது.

படிக்க வேண்டும்

spot_img