fbpx
Homeதலையங்கம்மீண்டும் சர்ச்சையில் ஆளுநர் ஆர்.என்.ரவி

மீண்டும் சர்ச்சையில் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னையில் நேற்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது சர்ச்சையாக வெடித்துள்ளது. அப்படி என்ன தான் பேசி விட்டார்?

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மிக ஆபத்தான இயக்கம். அது தீவிரவாதிகளுக்குப் பின்புலமாக இயங்குகிறது. தீவிரவாதத்திற்கு பல நாடுகளுக்கு ஆட்களை அனுப்புகிறது -இது தான் ஆளுநரின் சர்ச்சை பேச்சின் சாராம்சம்.

ஆளுநரின் இந்த பேச்சுக்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மட்டுமின்றி பிற இஸ்லாமிய அமைப்பினரும் தங்கள் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து இருக்கிறார்கள்.

குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, ஆளுநர் மீது தமிழக மக்கள் அதிருப்தியில் இருப்பதால் அதனைத் திசை திருப்ப பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எங்கள் மீதான குற்றச்சாட்டை ஆளுநரால் நிருபிக்க முடியுமா? என பதிலடி தந்துள்ளது.

ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் இப்படியெல்லாம் பேசுவது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் மத அடிப்படையிலான வெறுப்பு அரசியலை தீவிரப்படுத்தும் முயற்சி என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குரல் கொடுத்துள்ளார்.

ஒரு அமைப்பு தீவிரவாதத்துடன் தொடர்புடையது என்றால்… ஆளுநர் தனது கருத்தை மத்திய அரசுக்குத் தெரிவித்து இருக்கலாம். அதற்கு ஆதாரமிருந்தால் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்திருக்கலாம்.

தீவிரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது.

நாடு முழுவதும் உள்ள ஒரு அமைப்பைப் பற்றி பிரதமரோ, உள்துறை அமைச்சரோ பேசி இருக்கலாம். அது குறித்து தமிழக ஆளுநர் பேசுவதற்கு என்ன அவசியம் வந்தது? என்பதே அரசியல் விமர்சகர்களின் கேள்வி.

இந்த கேள்விக்கு விளக்கம் கிடைக்குமா?

படிக்க வேண்டும்

spot_img