இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ., நிறுவனம் தயாரித்த பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம், இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்களின் மொபைல் போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த விவகாரம் இந்தியா உட்பட உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பெகாசஸ் விவகாரம் குறித்து, மக்களவையில் விளக்கமளித்த ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், இதில் துளியும் உண்மை இல்லை என்றும் தெரிவித்தார்.
ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்த அடுத்த சில நிமிடங்களிலேயே பெகாசஸ் மென் பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட பிரபலங்களின் அடுத்த பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில், யாரையும் உளவு பார்க்கவில்லை என, நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் பெயரும் இருந்தது.
மேலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா, ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட சுமார் 50,000 முக்கிய பிரபலங்களின் மொபைல் போன்களும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
10 நாடுகளில் இத்தகைய உளவு செயலியை அரசாங்கங்கள் பயன்படுத்தி இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.
அதில் இந்தியாவும் ஒன்று என்ற அதிர்ச்சி தரும் தகவலை ஊடக நிறுவனங்கள் கூட்டாக வெளிப்படுத்தியுள்ளன.
இந்த உளவு செயலியை இந்திய அரசும் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சாதாரண விஷயம் அல்ல; உலகின் மிகப்பெரிய சுதந்திர நாடான இந்திய குடிமக்களின் உரிமைக்காக விடப்பட்ட சவாலாகும்.
இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் பாராளுமன்ற நிலைக்குழு வரும் 28ம் தேதி விசாரணை நடத்த உள்ளது.
அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தும் குடிமக்களின் அந்தரங்கத்தை உளவுபார்க்கும் இந்த பெகாசஸ் கருவியை இந்திய அரசு பயன்படுத்துவது சட்ட விரோதமானது.
இது குறித்த உண்மைகளைக் கண்டறிந்து குற்றவாளிகளைத் தண்டிக்க மத்திய அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.



