இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பது கேரளாவில் தான். ஒரு நாளைக்கு ஏறத்தாழ 30 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் சூழ்நிலையில் இப்போது நிபா வைரஸ் அச்சமும் சேர்ந்து விட்டது.
கேரளா கவனமாக இருந்தால் மட்டும் போதாது. அண்டை மாநிலமான தமிழ்நாடும் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ஒரு காலத்தின் கட்டாயம் இப்போது வந்துவிட்டது.
இந்தியாவிலேயே கேரளாவில் தான் இப்போது நிபா வைரசும் கால் எடுத்து வைத்திருக்கிறது. நிபா வைரஸ் பெரும்பாலும் பழம் தின்னி வௌவால் மூலம் பரவுகிறது. இந்த வௌவால்கள் சாப்பிட்டு கீழே போடும் பழங்களை குழந்தைகள் சாப்பிடுவதன் மூலமாகவும், அதை சாப்பிடும் பன்றிகள் மூலமாகவும் மனிதர்களுக்கு இந்த நோய் பரவுகிறது.
இந்த வைரசுக்கு நிபா வைரஸ் என்ற பெயர் வருவதற்கு காரணம் 1998ம் ஆண்டு மலேசியாவில் உள்ள காம்பு கங்கை நிபா என்ற கிராமத்தில் தான் முதன் முதலில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. அந்த கால கட்டங்களில் ஏராளமான உயிர்களை இந்த வைரஸ் பறித்ததால் நிபா வைரஸ் என்று பெயர் சூட்டப்பட்டது.
கேரளாவில் நிபா வைரஸ் புதிதல்ல. ஏற்கனவே 2018ம் ஆண்டு இந்த நிபா வைரசால் 17 உயிர்களை இழந்த நிலையில் தொடர்ந்து 2019ம் ஆண்டும் இந்த வைரஸ் தாக்குதல்கள் இருந்தன. இப்போது கேரளாவில் கோழிக்கோடு மாவட்டம் பழுர் என்ற இடத்தில் 12 வயது சிறுவன் நிபா வைரசால் உயிரிழந்துள்ளான்.
இந்த வைரஸ் மனிதர்களுக்கு மனிதர் தொடர்பின் அடிப்படையில் வேகமாக பரவும் என்பதால் அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளித்த 4 மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ பணி யாளர்கள், குடும்பத்தினர், உறவினர் என்று 265 பேர் பட்டியலிடப்பட்டு இப்போது மருத்துவ மனையில் இருக்கின்றனர்.
இதில் 12 பேருக்கு நிபா வைரசின் அறிகுறி இருக்கிறது. மரணமடைந்த அந்த கேரள சிறுவன் வௌவால்கள் கடித்து போட்ட பழத்தை சாப்பிட்டதாக தெரியவந்துள்ளது.
மொத்தத்தில் கேரளாவில் நிபா வைரஸ் பரவாமல் இருக்க வேண்டும்.
அதே போல் தமிழ்நாட்டுக்குள் கால் எடுத்து வைக்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு தமிழக, கேரள அரசுகள் மட்டுமல்லாமல் மத்திய அரசாங்கமும் முழு முயற்சி எடுக்க வேண்டும்.



