மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்களை 25 விழுக்காடு முதல் 150 விழுக்காடு வரை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு காரணம் மத்திய அரசு என தமிழ்நாடு அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதாவது, உள்ளாட்சி அமைப்புகளில் மத்திய அரசு திட்டங்களின் கீழ் உதவிகள் பெற வேண்டுமெனில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி அறிவிக்க வேண்டுமென மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் 15வது நிதிக்குழு பரிந்துரையில் கூறப்பட்டதன் அடிப்படையிலேயே சொத்து வரி உயர்த்தப்பட்டதாக தி.மு.க கூறுகிறது. அதையேதான், நிதிக்குழு பரிந்துரை தொடர்பான அறிக்கையிலும் காண முடிகிறது.
தமிழ்நாடு நகராட்சிகளின் சட்டம் பிரிவு 78-ன் படி அனைத்து வரிகளையும் தீர்மானிக்கும் அதிகாரம் அந்தந்த மன்றத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்ற மத்திய அரசு நிபந்தனை விதிப்பது அதிகார வரம்பு மீறிய செயலாகத்தானே இருக்க முடியும்?
மத்திய அரசின் திட்டங்களுக்கே மாநிலங்களிடம் இருந்து தான் நிதி கிடைக்கிறது என்பதை புரிந்து கொள்ளாமல், மத்திய அரசு திட்டங்களின் கீழ் உதவிகள் பெற வேண்டுமெனில் சொத்து வரி உயர்த்தப்பட வேண்டும் என நிபந்தனை விதிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பது, சாமானியர்களை மேலும் கடுமையாக பாதிக்கும். எனவே, சாமானியர்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கம்யூனிஸ்டு தலைவர் பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சித் தலைவர்களும் கூட கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒன்றிய அரசிடம் தமிழக அரசு தேவையான நிதியை கேட்டு பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை தமிழக முதல்வரும் அரசும் ஆராய்ந்து சொத்து வரியை குறைக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் வேண்டுகோளாக இருக்கிறது.
சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தமிழக அரசு ஆராய்ந்து ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகவும் உள்ளது. மத்திய அரசும் இணக்கம் காட்ட வேண்டும்.
செவி சாய்க்குமா மத்திய, மாநில அரசுகள்?



