fbpx
Homeபிற செய்திகள்சகி- ஒருங்கிணைந்த சேவை மையத்தில் இதுவரை கையாளப்பட்ட வழக்குகள் 250

சகி- ஒருங்கிணைந்த சேவை மையத்தில் இதுவரை கையாளப்பட்ட வழக்குகள் 250

தென்காசி மாவட்டத்தில் துவக்கப்பட்ட சகி-ஒருங்கிணைந்த சேவை மையத்தில், இதுவரை 250 வழக்குகள் கையாளப்பட்டுள்ளன. துன்பத்திற்கு பெண்களுக்கு உதவும் வகையில் இலவச தொடர்பு எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அனைத்துதரப்பு மக்களின் தேவைகளை சரியான நேரத்தில் பூர்த்தி செய்யும் ஆற்றல் மிக்க அரசாகத் திகழ்ந்து வருகிறது.

‘சிறைகாக்குங் காப்புளவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை’
என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.
சமுதாயத்தில் பல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில், தென்காசி மாவட்டத்தில் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் சகி – ஒருங்கிணைந்த சேவை மையம் 01.01.2022 அன்று துவங்கப்பட்டு (ஒன் ஸ்டாப் சென்டர்) இதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.

இதுவரை 250 வழக்குகள் ஒன் ஸ்டாப் சென்டர் மூலம் கையாளப்பட்டுள்ளது.
ஒன் ஸ்டாப் சென்டர் மூலம் குடும்ப வன்முறை பாலியல் துன்புறுத்தல் வரதட்சணை கொடுமை மற்றும் குடும்பத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகின்றது.

குடும்பம் சமுதாயம் பணிபுரியும் இடம் மற்றும் பொது இடங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு காண பெண்களுக்கான இலவச உதவி எண்ணான 181-ஐ தொடர்பு கொள்ளலாம். இலவச சட்ட உதவி சகி – ஒருங்கிணைந்த சேவை மையம் மூலமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

காவல்துறை உதவி அவசரகால மீட்பு நடவடிக்கைகள் மருத்துவ உதவி என அனைத்தும் பிரச்சனைகளுக்கேற்ப கிடைக்க வழிவகை செய்யப்படுகின்றது.
இதுமட்டுமன்றி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 1 முதல் 5 நாட்கள் வரை தற்காலிகமாக தங்குவதற்கு வசதி ஏற்படுத்தி தரப்படுகின்றது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலமாக இலவச சட்ட உதவி ஏற்பாடு செய்து தரப்படுகின்றது.

சகி – ஒருங்கிணைந்த சேவை மையம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்றியமையாத தேவையான மனநல ஆலோசனைகளை வழங்கி வருகின்றது. பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மட்டுமின்றி பிரச்சனைகளுக்கு காரணமானவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டு வருகின்றது.

சகி – ஒருங்கிணைந்த சேவை மையம் மூலமாக பயன்பெற்ற பயனாளிகள் தெரிவித்ததாவது: “மன ஆலோசனை பெற்றேன்” மோகனா: வேப்பங்கரணை திண்டிவனம் மாவட்டத்தில், 2 மகன்களுடன் தந்தை வீட்டில் வசித்து வருகிறேன்.

07.06.2022 அன்று வாழ்க்கை விரக்தியில் வீட்டிலிருந்து யாரிடமும் கூறாமல் செய்வதறியாமல் ரயில் மூலம் தென்காசி மேலகரம் சேர்ந்தபோது, அங்கு பள்ளி தாளாளர் 181 ஐ தொடர்பு கொண்டு எனக்கு உதவி புரியுமாறு கோரினார். சகி – ஒன் ஸ்டாப் சென்டருக்கு எங்களை அழைத்துச் சென்று 3 நாட்கள் தங்குமிடம் உணவு உடை தந்து பராமரித்து எனது உறவினர்களை, சென்னை மற்றும் திண்டிவனத்திலிருந்து வரவழைத்து அனுப்பி வைத்தனர்.

தகுந்த மன ஆலோசனைகள் மற்றும் இருப்பிடம் தந்து உதவிய ஒன் ஸ்டாப் சென்டருக்கும் சமுதாயத்தில் தேவையான இதுபோன்று அமைப்பு நடைபெற உறுதுணையாக இருக்கும் தமிழக அரசுக்கும் நன்றி என்றார்.

“மனம் மாறினார் கணவர்” ஜெயலட்சுமி: நெல்லையப்பபுரம் பூலாங்குளத்தில் வசித்து வருகிறேன். கணவரின் குடிப்பழக்கம் காரணமாக அவர் வீட்டில் பிரச்சனை செய்து வந்ததால், மன உளைச்சலுக்கு ஆளாகி பெண்களுக்கான உதவி எண் 181 ஐ தொடர்பு கொண்டு, தென்காசி சகி – ஒன் ஸ்டாப் சென்டரில் பிரச்சனையை தெரிவித்தேன்.

உடனடியாக சகி – ஒன் ஸ்டாப் சென்டர் மூலம் காவல் துறை உதவி கிடைக்கப்பெற்று, எனது கணவருக்கு மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. கணவரின் மனமாற்றத்திற்கு உதவி புரிந்ததற்கு சகி – ஒன் ஸ்டாப்பிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
“மகிழ்ச்சியுடன் வாழ்கிறேன்” யுகேஸ்வரி: ஊத்துமலையில், தந்தையுடன் வசித்து வந்தேன். எனக்கும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. வாழ்ந்து வந்த நிலையில், எங்கள் இருவரிடையே ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக கணவர் என்னை மதுரையில் பாதி வழியிலே விட்டுச் சென்று விட்டார்.

எனது தந்தை மூலமாக வீடு வந்து சேர்ந்த நான் 181 உதவி எண் மூலம், கணவருடன் என்னை சேர்த்து வைக்க கோரினேன். அவர்கள் வேறு மாவட்டத்தில் கணவர் இருந்தபோதிலும் தர்மபுரியிலுள்ள ஒன் ஸ்டாப் சென்டருக்கு தொடர்பு கொண்டு, எனது கணவருக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள். இன்று தென்காசி சகி ஒன் ஸ்டாப் சென்டர் மூலம் எனது கணவருடன் மகிழ்ச்சியாக பெங்களூரில் வாழ்ந்து வருகிறேன் என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img