fbpx
Homeபிற செய்திகள்கோவையில் மழைநீர் சாலையில் தேங்காமல் இருக்க திட்டம் தேவைப்படுகிறது அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

கோவையில் மழைநீர் சாலையில் தேங்காமல் இருக்க திட்டம் தேவைப்படுகிறது அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

கோவையில் மழை பெய்தால் சாலையில் மழை நீர் தேங்காத அளவுக்கு வடிகால் அமைக்கும் திட்ட மிடல் தேவைப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பியுள்ளன. இதில், உக்கடம் பகுதியில் அமைந்துள்ள வாலாங்குளம் கடந்த வாரம் அதன் முழு கொள்ளளவை எட்டியது.

குளத்தில் இருந்த உபரி நீர் திருச்சி சாலை மார்க்கமாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
இந்த சூழலில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை வாலாங்குளத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

குளத்திற்கு நீர் வரும் பாதை, குளத்தில் இருந்து நீர் வெளியேறும் பாதை விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழையால் கோவை மாவட்டத்தில் 26 குளங்கள் நிரம்பியுள்ளன. கோவைக்கு மழை நீர் வடிகால் குறித்த திட்டமிடுதல் முக்கியம். அதற்கான ஆலோசனைகள் மேற்கொண்டு வருகிறோம்.

வாலாங்குளத்தில் இருந்து உபரி நீர் வெளியேறும் பைப் குறுகலாக உள்ளது. அதை மாற்றி வடிவமைக்க வேண்டும். மாவட்டத்தில் 31 பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும், 7 பள்ளிகளில் மழை நீர் தேக்கமடைந்துள்ளது. அதனை மோட்டார் வைத்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில் மழையால் பாதிப்பு இல்லாத அளவு சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் செய்துள்ளது. இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

மழையால் மின்சார தட்டுப்பாடு என்பது இல்லை. கோவையில் 150 இடங்களில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றன. மக்கள் தேவைகளை துறைகள் வாரியாக ஆய்வு செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவையில் மழை பெய்தால் சாலையில் மழை நீர் தேங்காத அளவுக்கு வடிகால் அமைக்கும் திட்டமிடல் தேவைப்படுகிறது. இது தொடர்பாகவும் ஆலோசனை செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img