கொரோனா தொற்று பாதிப்பால் உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தனர். பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது முதல் 14 மாதங்களில் உலகம் முழுவதும் 15 லட்சம் குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா இறப்புகள் அதிகம் பதிவான 21 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் ஒவ்வொரு 19 பேர் இறப்பில் ஒரு குழந்தை தனது பெற்றோரை இழந்துள்ளதாகவும் ஒவ்வொரு 12 விநாடிக்கும் ஒரு குழந்தை தனது பெற்றோரை இழந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2-வது அலையில் கடந்த ஏப்ரல் முதல் மேமாதம் 28ம் தேதிவரை 645 குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
அவர்களுக்கு நீண்டகால உதவிகள் தேவைப்படுவதை கருத்தில் கொண்டு, கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகள் நலனுக்காக பிரதமர் மோடி சிறப்பு உதவித் திட்டத்தை அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்த குழந்தைக்கு 18 வயதுவரை இலவச கல்வி, சுகாதார வசதிகளும், ரூ.10 லட்சம் வைப்பு நிதியும் வழங்கப்படும்.
அறிவிப்போடு நின்று விடாமல் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தேவையான கல்வியை தொடர்ந்து தொய்வின்றி வழங்கிட வேண்டும், தேவையான நலத்திட்டங்களையும் வழங்கிட வேண்டும்.
அந்த மழலைகள், பெரியவர்களாகி சொந்தக் காலில் நிற்கும் வரை அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.



