fbpx
Homeதலையங்கம்குற்றவாளிகள் இனி தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் இனி தப்பிக்க முடியாது!

நாட்டின் குற்றவியல் நடைமுறை சட்டத்தில், குற்றவாளிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டோர் குறித்த பயோ மெட்ரிக் தகவல்களை பதிவு செய்யும் உரிமையை போலீசாருக்கு வழங்குவது தொடர்பான மசோதா, லோக்சபா மற்றும் ராஜ்ய சபாவில் சமீபத்தில் நிறைவேறியது.

இதையடுத்து, இந்த மசோதா, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

தற்போது நடைமுறையில் இருக்கும் பழைய சட்டப்படி ஒரு குற்றவாளியிடம் அடையாளங்களை தரும்படி கேட்கவோ கட்டாயப்படுத்தவோ முடியாது. ஆனால் புதிய சட்டப்படி, எந்த ஒரு குற்றத்தின் கீழும் தண்டிக்கப்பட்டவர் அல்லது கைது செய்யப்பட்டவரிடம் இருந்து உயிரியல் மாதிரிகளை பெற முடியும்.

ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள், குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனைக்குரிய குற்றம் செய்தவர்களிடம் மட்டுமே கட்டாயப்படுத்தி உயிரியல் மாதிரிகளை பெற முடியும்.

இந்த உயிரியல் மாதிரிகளை பெறும் அதிகாரத்தை காவல்நிலைய பொறுப்பு அதிகாரி அல்லது தலைமைக் காவலர் அல்லது அதற்கு மேல் பொறுப்பில் இருப்பவர்களுக்கு வழங்க இச்சட்டம் வழி செய்கிறது.

புதிய சட்டப்படி கையெழுத்து மாதிரி, ரத்தம், விந்து, தலைமுடி மாதிரி, கருவிழி ஸ்கேன், உமிழ்நீர் மாதிரிகள் எடுக்கலாம். டிஎன்ஏ ஆய்வுக்கும் உட்படுத்தலாம்.

அடுத்த தலைமுறையினரின் குற்றங்களை, பழைய தொழில்நுட்பங்கள் உதவியுடன் கண்டுபிடிக்க முடியாது. அதற்கான மாற்றங்களை சட்டத்தில் உருவாக்க வேண்டும். இதற்கு, குற்றவாளிகளின் பயோ மெட்ரிக் மாதிரிகள் உதவும்.

நவீன கால குற்றவாளிகளைப் பிடிக்கவும் அவர்களிடம் இருந்து மக்களைப் பாதுகாக்கவும் இந்த சட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அனைவராலும் வரவேற்கப்படுகிறது.

ஆனாலும் இச்சட்டம் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் என்ற விமர்சனமும் எழாமல் இல்லை. பல கோடி நல்லவர்களைப் பாதுகாக்க குற்றம் புரியும் ஓரிருவரின் உரிமையைப் பறிப்பது தவறல்ல என்று எதிர்வாதமும் செய்யப்படுகிறது.

பயோ மெட்ரிக் தகவல்களை பதிவு செய்ய வழிசெய்யும் புதிய சட்டம் மக்களைப் பாதுகாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

காலத்துக்கு ஏற்ப மாற்றம் அவசியம் தானே!

படிக்க வேண்டும்

spot_img