இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில், சமையல் எரிவாயு முதன்முறையாக 1,000 ரூபாயைத் தாண்டியுள்ளது.
கடந்த மே 1 அன்று வர்த்தகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலையை மட்டுமே ஒன்றிய அரசு உயர்த்தி இருந்தது. 19 கிலோ வர்த்தகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலை, ஒரேநாளில் 102 ரூபாய் உயர்த்தப்பட்டதன் காரணமாக, அதன் விலை 2,355 ரூபாயாக அதிகரித்தது.
கடந்த 2021 ஜனவரியில் வீட்டுப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 710 ரூபாயாக இருந்தது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 2021 அக்டோபர் 6-ம் தேதி ரூ.915.50 என்ற அளவிற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர், 2022 மார்ச்சிலும் 50 ரூபாய் உயர்த்தப்படவே சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.965.50 ஆக அதிகரித்தது.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு 2 மாதமாக உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. தற்போது மேலும் 50 ரூபாய் விலை உயர்த்தப்பட்ட நிலையில், சிலிண்டர் ஒன்றின் விலை 1,015 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 17 மாதங்களில் சிலிண்டர் ஒன்றுக்கு 315 ரூபாயும், 2022-ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும் 100 ரூபாயும் சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது.
இதன் மூலம் இந்திய வரலாற்றில் முதன்முறையாக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.1,000க்கு மேல் உயர்த்தி சாதனை படைத்துள்ளார், பிரதமர் நரேந்திர மோடி.
சர்வதேச மார்க்கெட்டைப் பொறுத்து சமையல் எரிவாயு விலை ஏறும் இறங்கும் என ஒன்றிய அரசு சப்பைக்கட்டு கட்டுகிறது.
எத்தனை முறை ஏறி இருக்கிறது, எத்தனை முறை இறங்கி இருக்கிறது? என்பதை மக்களுக்கு பட்டியலிட்டு தெரிவிக்க முன்வருவார்களா? ஏறிய பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை விட்டு இறங்க மறுக்கிறதே? அதே போலத்தான் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் இனி 1000 ரூபாயை விட்டு கீழே இறங்க மறுக்கும்.
எவ்வளவு விலை ஏறினாலும் வாங்கித் தானே ஆக வேண்டும். மீண்டும் விறகு அடுப்பையா பற்ற வைக்க முடியும்?



