fbpx
Homeதலையங்கம்என்எல்சியில் தமிழர்கள் அடியோடு புறக்கணிப்பு!

என்எல்சியில் தமிழர்கள் அடியோடு புறக்கணிப்பு!

நெய்வேலி என்எல்சியில் 299 பொறியாளர்கள் புதிதாக நியமனம் செய்யப்படுவதில், ஒருவர்கூட தமிழர் இல்லை என்ற வேதனைச் செய்தி வெளியாகி இருக்கிறது.

வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் பெருந்தலைவர் காமராஜர், தமிழகத்தில் பல்வேறு தொழிற்சாலைகளை அமைத்து, தொழில் புரட்சி ஏற்படுத்தினார். அதிலே ஒன்று தான் என்எல்சி நிறுவனம்.

அதன்மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கு அப்போது காமராஜர் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். தமிழக இளைஞர்களின் உழைப்பால் அந்நிறுவனம் உயர்ந்து, இந்தியா முழுவதும் கிளைகளை நிறுவி வருகிறது.

ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, நெய்வேலியில் 299 பொறியாளர்களை தற்போது நியமனம் செய்துள்ளது. அவர்கள் அனைவருமே வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர்கூட தமிழர் இல்லை என்பது வருத்தமளிக்கிறது.

கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகத்தில் ஒருவர்கூட, அதற்கு தகுதியான பொறியாளர் இல்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது.
இது தமிழக மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

என்எல்சி நிறுவனத்தின் பணிகளுக்கு தமிழர்கள் தேர்வு செய்யப்படாததன் மூலம் தமிழ்நாட்டு பொறியாளர்களுக்கு திட்டமிட்டு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. பொறியாளர் நியமனத்தில் பல ஆண்டுகளாகவே தமிழர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவதில்லை.

வட இந்தியர்களுக்கு ஆதரவாக போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடக்கின்றன. என்.எல்.சியின் உயர்பதவிகளை முழுக்க முழுக்க வட இந்தியர்கள் ஆக்கிரமித்திருப்பது தான் இதற்கு காரணம். என்.எல்.சி சுரங்கங்கள் அமைக்க நிலம் கொடுத்தவர்கள் பாமர மக்கள்.

தொடக்க காலத்தில் அதன் வளர்ச்சிக்காக உழைத்தவர்கள் தமிழர்கள். அதனால் வளர்ந்த என்.எல்.சி நிறுவனத்தின் பயன்களை வட இந்தியர்களும், பிற மாநிலத்தவரும் சுரண்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி என ஏராளமான அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல் என்.எல்.சி பணிகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு கண்டன அறிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில் என்.எல்.சி. பொறியாளர் பணியிடத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு பற்றி லோக்சபாவில் விவாதிக்கக் கோரி திமுக தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் என்.எல்.சி. பணிகள் குறித்து திமுக விரைவில் கடுமையான விவாதம் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் காலூன்ற வியூகம் வகுக்கும் தமிழக பாஜக இந்த விவகாரத்தில் என்ன கருத்தை முன்வைக்கப் போகிறது? எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தும் பாஜக, இந்த பிரச்சினையில் தமிழர்களுக்கு ஆதரவாக களமிறங்குமா?

பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகிறார்கள். இது குறித்து தமிழக அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டிய காலக்கட்டாயம் உருவாகி இருக்கிறது.

தமிழக அரசு மிக விரைவாக தமிழர் உரிமையை மீட்கக் களத்தில் இறங்க வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img