fbpx
Homeதலையங்கம்இரட்டை இலை சின்னம்!

இரட்டை இலை சின்னம்!

அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டார். நத்தம் விஸ்வநாதன் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார்.

அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், “அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான என்னை கட்சியிலிருந்து நீக்குவதற்கான அதிகாரம் யாருக்கும் இல்லை.

கட்சி விதிப்படி ஒன்றரை கோடி தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கோ, கே.பி.முனுசாமிக்கோ அதிகாரம் இல்லை. அதிமுக கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமியையும், கே.பி.முனுசாமியையும் கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிடுகிறேன்” என்று கூறினார்.

இரு தரப்பும் மாறி மாறி கட்சியிலிருந்து நீக்கி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தமிழக அரசு சீல் வைத்துள்ளது.

பூட்டி சீல் வைக்கப்பட்ட நிலையில், அது யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக முடிவு செய்ய எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு 25 ம் தேதி ஆஜராக கோட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். தலைமை அலுவலகம் யார் கைக்கு வரும், எப்போது வரும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடுவோம் என்று ஓபிஎஸ் அறிவித்துள்ளார். ஒருவேளை வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஓபிஎஸ் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தால் அந்த இடங்களுக்கு இடைத்தேர்தல் வரும்.

தேர்தல் வரும் போது இரு அணிகளாக அதிமுக பிரிந்து நின்றால் ஏற்கனவே உள்ளாட்சி இடைத்தேர்தலில் நடந்தது போல, கட்சியின் சின்னமான இரட்டை இலை முடக்கப்பட வாய்ப்புள்ளது என்பதே அரசியல் விமர்சகர்களின் கணிப்பாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது அதிமுகவுக்கு மூன்று தலைவர்கள் உரிமை கொண்டாடுகின்றனர். இன்னும் நான் தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறேன் என்று தேர்தல் ஆணையத்தில் சசிகலா உரிமை கொண்டாடி உள்ளார். இந்த முறையீடு தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது.

அதே நேரத்தில் ஓபிஎஸ் நான் தான் ஒருங்கிணைப்பாளர். நான் தான் அதிமுகவுக்கு தலைமை வகிக்கிறேன் என்று கூறி வருகிறார். தற்போது 3வதாக எடப்பாடி பழனிச்சாமி நான் தான் தற்போது அதிமுகவுக்கு தற்காலிக பொதுச் செயலாளர், நான் தான் தலைவர் என்று கூறி வருகிறார்.

இருப்பது இரட்டை இலை. அதற்கு சசிகலா, ஓபிஎஸ். இபிஎஸ் என 3 பேர் உரிமை கொண்டாடுகிறார்கள். இதனால், வரும் காலங்களில் 3 பேரும் நீதிமன்றத்தை நாடுவார்கள்.

இந்த மோதலில் யார் வெல்ல போகிறார்கள்? என்பது ஒருபுறமிருக்க, அதிமுக எதை நோக்கி செல்கிறது என்பதில் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். இப்படி கட்சியை சீரழிக்கிறார்கள் என்று அவர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர்.

நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என பிரச்சினை செல்லும் போது அதில் தீர்வு கிடைப்பதில் கால தாமதம் ஏற்படலாம். இரட்டை இலை இருந்தால் தான் அது முழுமையான, வலிமையான அதிமுகவாக இருக்கும்.

அதிமுக தலை நிமிருவது எப்போது?

படிக்க வேண்டும்

spot_img