fbpx
Homeதலையங்கம்இந்தியா சாதனை!

இந்தியா சாதனை!

திட்டம் தொடங்கப்பட்ட 9 மாதங்களில் 100 கோடிக்கு மேற்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ்களை செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கியது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. முதல் கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

பின்னர் முன்களப் பணியாளர்களுக்கும், 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. நாட்டில் முதல் 10 கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்த 85 நாட்கள் தேவைப்பட்டது.

ஆனால் அடுத்த 10 கோடி டோஸ்களை 45 நாட்களிலேயே இந்தியாவால் செலுத்த முடிந்தது. இவ்வாறு அடுத்தடுத்த 10 கோடி தடுப்பூசி டோஸ் இலக் குகளை மிகக்குறுகிய நாட்களிலேயே மத்திய, மாநில அரசுகள் அடைந்தன. அதன்படி கடந்த ஆகஸ்டு 6ம் தேதி 50 கோடி டோஸ்களை செலுத்தி மிகப்பெரிய மைல்கல்லை இந்தியா தொட்டது.

டிசம்பர் இறுதிக்குள் 100 கோடி டோஸ்கள் என்ற இலக்கினை மத்திய அரசு நிர்ணயித்தது. நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாரம்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.

அவ்வப்போது நாடு தழுவிய அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் நேற்று 100 கோடி தடுப்பூசி டோஸ்களை கடந்து மிகப்பெரிய சாதனையை இந்தியா படைத்திருக்கிறது.

நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 2 மாதங்களுக்கு முன்பாகவே இந்தியா எட்டி இருப்பது உலக நாடுகள் அனைத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ் போன்ற தொழில்நுட்பத்தில் அசுர வளர்ச்சி அடைந்த நாடுகள் கூட தங்கள் மக்களுக்கு இவ்வளவு வேகமாக தடுப்பூசிகளை செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே நாட்டிலேயே அதிகளவில் கொரோனா தடுப்பூசி செலுத்திய மாநிலமாக உத்தரப்பிரதேசம் திகழ்கிறது. இதற்கு அடுத்த அடுத்த இடங்களில் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

நாட்டில் 100 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக சுகாதார நிறுவனமும் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img