தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 07.07.2022 அன்று, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கி வைத்தார்.
உயர்கல்வியினை அனைவரும் பெறும் வகையிலும் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கு உட்பட்டு அனைத்து பிரிவினரையும் கல்வியின் எல்லைக்குள் கொண்டு வரும் வகையிலும் கொள்கைகள் வகுக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்திடும் நோக்கில் பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.
இலவச கல்வித் திட்டம், முதல் தலைமுறை பட்டதாரி சலுகைகள், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கு நிதியுதவி போன்ற பல்வேறு திட்டங்களை, தமிழக அரசு செயல்படுத்தி வருவதால், அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது.
அந்த வகையில் 2021-22-ம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின்போது, தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான உயர்கல்வி வழங்குவதற்கும் மாணவர் சேர்க்கை விகிதாசாரத்தை அதிகப்படுத்துவதற்கும், ஈரோடு மாவட்டம் – தாளவாடி உட்பட 10 மாவட்டங்களில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதேபோன்று 2022-23-ம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின்போது, ஈரோடு மாவட்டம் -அந்தியூர் உட்பட 10 மாவட்டங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி புதியதாக அறிவிக்கப்பட்ட 20 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் மாணவ, மாணவிகள் சேர்க்கை பெற்று பயன்பெறும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய தற்காலிக கட்டடங்களில் 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. இளங்கலை (தமிழ்) பிரிவில் 19 மாணவர்கள் 41 மாணவிகள், பி.ஏ. இளங்கலை (ஆங்கிலம்) பிரிவில் 11 மாணவர்கள், 13 மாணவிகள், பி.காம். (வணிகவியல்) இளங்கலை பிரிவில் 30 மாணவர்கள் 27 மாணவிகள், பி.எஸ்.சி. (கணினி) இளங்கலை பிரிவில் 11 மாணவர்கள் 16 மாணவிகள், பி.எஸ்.சி. (கணிதம்) இளங்கலை பிரிவில் ஒரு மாணவர், 3 மாணவிகள் என மொத்தம் 172 மாணவ, மாணவிகள் கல்லூரியில் பயில்வதற்கு சேர்க்கைக்கு விண்ணப்பித்து பயின்று வருகின்றனர்.
“வாழ்நாள் முழுதும் நன்றிக்கடன்”
அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்துள்ள அந்தியூர் பகுதியைச் சேர்ந்த ரிஹானா தெரிவித்ததாவது:
நான் அந்தியூர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயின்று 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 481 மதிப்பெண்கள் பெற்றேன்.
அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. இளங்கலை (தமிழ்) பாடப்பிரிவில் சேர்ந்துள்ளேன். அம்மா கூலி வேலை செய்து வருகிறார். தம்பி 11-ம் வகுப்பு பயின்று வருகிறார்.
படிப்பை தொடர்வது சந்தேகம் என்ற சூழலில், முதல்வர் அந்தியூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும் என்று அறிவித்தார். ஆசிரியர்கள் அறிவுரைப்படி, அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. இளங்கலை தமிழ் பிரிவில் என்னை சேர்த்தார்.
கல்லூரி கட்டணமாக ரூ.3130/- மட்டுமே கட்டச் சொன்னார்கள். ஏழை எளிய மாணவிகளின் கல்விக் கனவை நிறைவேற்றிடும் வகையில் அருகாமையிலே கல்லூரி அமைத்து தந்த முதல்வருக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி கடன் பட்டிருப்பேன் என்றார்.
“நல்ல வேலைக்குச் செல்வேன்”
அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்துள்ள அந்தியூர் தவிட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த ஈ.பவித்ரா தெரிவித்ததாவது:
அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பினை முடித்தேன். தேர்வில் 484 மதிப்பெண்கள் பெற்றேன்.
ஒரு அக்கா உள்ளார். தந்தை ஈஸ்வரன் நெசவு தொழில் செய்கிறார். எனக்கு இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலே கல்லூரி அமைய பெற்றுள்ளது மகிழ்ச்சியை அளித்துள்ளது.
கல்லூரிக்கு அனுப்பலாமா வேண்டாமா என எனது பெற்றோர் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் முதல்வர், வசிக்கும் பகுதிக்கு அருகாமையிலேயே கல்லூரியை தொடங்க அனுமதி அளித்து, துவக்கி வைத்தார். இதில் நான் பி.காம். இளங்கலை (வணிகவியல்) பாடப்பிரிவில் சேர்ந்துள்ளேன்.
நன்றாக படித்து நல்ல வேலைக்கு செல்வேன் என்று நம்பிக்கை உள்ளது. இத்தகைய வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
“கட்டணமும் மிச்சம், நேரமும் மிச்சம்”
அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்துள்ள அந்தியூர் எண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த கபிலன் தெரிவித்ததாவது:
அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்தேன். 456 மதிப்பெண்கள் பெற்றேன்.
தந்தை தையல் வேலை செய்து வருகிறார். அந்தியூர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. இளங்கலை (தமிழ்) பிரிவில் சேர்ந்துள்ளேன். தமிழ் எனக்கு விருப்பமான பாடமாகும். கல்லூரியில் ரூ.3140/- மட்டும் கட்டணமாக பெற்றுக் கொண்டார்கள்.
ஊருக்கு அருகிலேயே இருப்பதால் நேரம் மற்றும் பணம் மிச்சம் ஆகிறது.
இந்த நேரத்தைக் கொண்டு நான் வேறு போட்டி தேர்வுகளை எழுத உள்ளேன். ஈரோடு கலை அறிவியல் கல்லூரி அல்லது வேறு ஏதேனும் தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலையை மாற்றி, ஊருக்கு அருகாமையில் கல்லூரியை அமைத்து தந்த முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
ஏழை, எளிய மாணவர்களின் எட்டாக்கனியாக இருந்த கல்லூரி கனவை நனவாக்கி, ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க உத்தரவிட்டு அவர்களின் உயர்கல்விக்கு அடித்தளமிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
தொகுப்பு:
க.செந்தில்குமார்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
ஈரோடு.



