ஈழத் தமிழர்களை அழித்த ராஜபக்சே குடும்பத்தினர் கடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்ததும், இனி தங்களை யாரும் தட்டி கேட்க முடியாது என்ற ஆணவத்துடன் செயல்படத் தொடங்கினார்கள்.
அண்ணன் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியிலும், தம்பி கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியிலும் அமர்ந்து கொண்டு ஆட்டம் போட்டனர். அவர்களது குடும்பத்தினரை மந்திரிகளாக்கி, அரசின் உயர்துறைகள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அதிகார மையங்களாகவும் மாறி இருந்தனர்.
அவர்கள் செய்த தவறுகளும், சொத்து குவிப்பும் மிக விரைவில் வெட்ட வெளிச்சத்துக்கு வந்து இலங்கை மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான் அதிபர் கோத்தபய ராஜபக்சே மிகப்பெரிய தவறு ஒன்றை செய்தார். அன்னிய செலாவணி விஷயத்தில் தவறான முடிவுகளை எடுத்தார்.
ராஜபக்சே குடும்பத்தினர் இன்று நாட்டைவிட்டே ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.நான் ஒரு சிங்கள பௌத்த தலைவன்,- நான்தான் நீங்கள் தேடிய தலைவன் என்று எக்காளமிட்ட கோத்தபய ராஜபக்சேவின் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றியிருக்கின்றனர்.
ஜனாதிபதி மாளிகையின் படுக்கையறை, நீச்சல் தடாகம் ஆகியவற்றை போராட்டக்காரர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் சர்வதேச ஊடகங்களில் பிரதான இடத்தை பிடித்திருக்கின்றன.
அதிகாரத்தின் உச்சத்திலிருக்கும் போது, தங்களது அதிகாரத்தின் எல்லைகள் தெரியாமல் மமதை கொள்பவர்கள் பலரது நிலைமை இப்படித்தான் முடிந்திருக்கின்றது.
அது இப்போது ராஜபக்சேக்களுக்கும் நடந்திருக்கின்றது. நாட்டை முன்னோக்கி வழிநடத்துவதற்கான எந்தவொரு உருப்படியான திட்டங்களையும் கொண்டிருக்காமல், வெறுமனே, சிங்கள இனவாதத்தின் மூலம் நீண்ட காலத்திற்கு ஆட்சியிலிருப்பதற்கான கனவையே ராஜபக்சேக்கள் கொண்டிருந்தனர்.
ஒட்டுமொத்த இலங்கையே, ராஜபக்சே குடும்பத்தினுடையது போன்று காட்சியளித்தது. மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள், மறுபுறமாக, அரசர்கள் போன்றே செயல்பட்டனர்.
இதன் விளைவாக, ஆதரித்த மக்களே, இப்போது வெறுத்து துரத்துகின்றனர். கோத்தபய ராஜபக்சே 69 லட்சம் மக்களின் ஆதரவில் வெற்றிபெற்றதை தொடர்ந்து,சிங்கள பௌத்தத்தின் காவலனாக தன்னை முன்னிறுத்திக் கொண்டால், தொடர்ந்தும் ஆட்சியிலிருக்கலாம் என்பதே கோத்தபயவின் அரசியல் கணக்காக இருந்தது.
இப்போது அவமானகரமான தோல்வியை சந்தித் திருக்கின்றனர். இதில் ரணில் விக்கிரமசிங்கேவும் தோல்வியடைந்திருக்கின்றார். அதிகார மமதையில் தலை கால் புரியாமல் செயல்படும் ஆட்சியாளர்கள் அனைவருக்கும் இது ஒரு படிப்பினை.
அதே வேளை, மக்கள் எழுச்சி கொண்டால், அதிகாரத்திலிருப்பவர்கள் அடங்கித்தானாக வேண்டும் என்பதற்கும் இது ஒரு நல்ல உதாரணமாகும். ஜனாதிபதி செயலகம் போராட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டதை தொடர்ந்து ராஜபக்சேக்கள் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது.
கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ததும், எதிர்க்கட்சிகள் கூட்டாக சேர்ந்து புதிய அரசை அமைக்க முனைந்திருக்கிறார்கள். அந்த ஆட்சியாவது உருப்படியாக செயலாற்றி, நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தி மக்களை காப்பாற்றுமா?
இலங்கையில் நல்லதே நடக்கட்டும்!



