விருதுநகர் மாவட்டம், பாலவனத்தம் கிராமத்திற்கு வருகை தந்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனிடம் ஒரு பெண் சற்று ஆவேசமாக பேசியபடி மனு கொடுத்தார்.
அப்போது அமைச்சர், அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறும்விதமாக அந்தப் பெண்ணின் தலையில் தன் கையில் இருந்த காகிதத்தால் தட்டிய சம்பவம் வழக்கம் போல சமூக வலைதளங்களில் விஸ்வரூபம் எடுத்தது.
இதுபோன்று ஏதாவது நடக்காதா என்று காத்திருந்தாரோ என்னவோ மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, பெண்ணை அமைச்சர் அடித்து விட்டார். 24 மணி நேரத்தில் அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும், இல்லாவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என்று அறிவித்து விட்டார்.
இதற்கிடையில் அந்த பெண்ணே, அமைச்சர் என் தலையில் செல்லமாகத் தான் தட்டினார். அவரை நீண்டகாலமாக என் அண்ணனாகவே பார்க்கிறேன் என்று செய்தியாளர்களிடம் தெரி வித்து அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதன் பிறகாவது, அறிவித்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதா?.
இல்லையே. அமைச்சர் வீடு முன் பாஜகவினர் முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர். அமைச்சரை பதவி விலகக் கோரும் அளவிற்கு இந்த விவகாரத்தில் என்ன நடந்து விட்டது?. அரசியல் நாகரீகம் எங்கே போனது? என்பது பிற அரசியல் கட்சித் தலைவர்களின் கேள்வி-.
இப்படி சர்வசாதாரண விஷயத்தை பூதாகாரமாக்கி போராட்டம் நடத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இல்லையேல் போராட்டங்களுக்கே மவுசு குறைந்து போகும் என்பது தானே உண்மை. இதனை அரசியல் தலைவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்நிலையில், அரசியல் நாகரீகம் என்ன என்பதை அண்ணாமலைக்கு அவரது கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் மூத்த தலைவருமான நயினார் நாகேந்திரன் இடித்துரைத்திருப்பது சற்றே ஆறுதல் தருகிறது.
வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மனு அளிக்க வந்த பெண்ணைத் தலையில் தட்டியதை பெரிதாக்க வேண்டிய அவசியமில்லை என்றே நினைக்கிறேன்` என்று நயினார் நாகேந்திரன் கூறி இருக்கிறார். இது அவரது அரசியல் நாகரீகத்தையும் பெருந்தன்மையையும் காட்டுகிறது.
பொதுவாழ்வில் ஈடுபடும் எந்தக் கட்சித் தலைவராக இருந்தாலும் பண்பட்ட அரசியல் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும். எடுத்தேன், கவிழ்த்தேன் என்பதாகப் பேசி விடக்கூடாது; செயல்படக் கூடாது.
அண்ணாமலை புரிந்து கொண்டு திருந்த வேண்டும்!



