fbpx
Homeதலையங்கம்வெல்லட்டும் மாநில அரசின் முயற்சி!

வெல்லட்டும் மாநில அரசின் முயற்சி!

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராகவே அனைத்து அரசியல் கட்சிகளும் நிலைப்பாடு கொண்டுள்ளன. இத்தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் பலனில்லை.

இந்நிலையில் நீட் தேர்வால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு கடந்த ஜூன் 10ம் தேதி தமிழக அரசால் அமைக்கப்பட்டது.

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய்ந்து ஒரு மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் படி இந்த குழுவுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி இந்த குழு நேற்று 165 பக்க அறிக்கை சமர்ப்பித்தது.

இதற்கிடையில் இந்தகுழுவை எதிர்த்து தமிழக பாஜ பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்றும் உத்தரவிட்டனர். இது தமிழக அரசின் முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதப்படுகிறது.

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கடந்த 2006ம் ஆண்டும் நுழைவுத் தேர்வு இருந்தது.

அப்போது நீதிபதி ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் அந்த நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

அதன் அடிப்படையிலேயே தற்போது நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி விலக்கு பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது.

வெல்லட்டும் மாநில அரசின் முயற்சி. வழி விடட்டும் ஒன்றிய அரசு.

படிக்க வேண்டும்

spot_img