தமிழகத்தில் பாஜகவின் மூத்த தலைவர் இல. கணேசனை மணிப்பூர் ஆளுநராக நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் அறிவித்தார். இல. கணேசனுக்கு பாஜகவில் இருந்து மட்டுமல்லாமல் பல்வேறு கட்சிகளில் இருந்தும் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
பாஜகவில் புதியதாக இணைந்தவர்கள்கூட திடீரென உயர் பதவிகளை அடைய முடியும் என்ற கருத்து உருவாகியுள்ளது.
தமிழக பாஜகவில் பல மூத்த தலைவர்கள் இருந்தாலும் புதியவர்களுக்கு மாநில தலைவர், மத்திய அமைச்சர், ஆளுநர் பதவி அளிக்கப்படுகிறது என்று தமிழக பாஜக மூத்த தலைவர்கள் மத்தியில் முணுமுணுப்பும் சலசலப்பும் இருந்துவந்தது.
இதை சரி செய்யும் விதமாகத்தான், பாஜக தேசிய தலைமை, தமிழக பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசனை ஆளுநராக நியமனம் செய்துள்ளது.
பாஜக ஆட்சிக் காலத்தில் இதுவரை தமிழகத்தில் இருந்து 3 தலைவர்கள் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழிசை சௌந்த ரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்யப் பட்டார். வி.சண்முகநாதன் மேகாலயா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து இப்போது இல.கணேசன் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதனை தமிழ்நாட்டுக்கு பாஜக அளித்திருக்கும் மேலும் ஒரு மரியாதை என்றே சொல்லலாம்.
இல.கணேசனுக்கு இந்த வாய்ப்பு தாமதமாகத்தான் கிடைத்திருக்கிறது என்றாலும், அவரது அரசியல் பங்களிப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த கவுரவம் என்றால் மிகையாகாது.
பாஜக மட்டுமின்றி, அனைத்து கட்சியினரின் வாழ்த்துக்களோடு இல.கணேசன் நாளை (27ம் தேதி) மணிப்பூர் மாநில ஆளுநராக பதவியேற்கிறார்.
தமிழ் மீது தீராத காதல் கொண்ட அவரது பணி சிறக்க எந்த பாகுபாடும் இன்றி ஒட்டுமொத்த தமிழகமும் வாழ்த்துகிறது. நாமும் வாழ்த்துவோம்.



