fbpx
Homeதலையங்கம்பத்து கோடி சிறார்களை பாதுகாப்போம்!

பத்து கோடி சிறார்களை பாதுகாப்போம்!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதோடு ஒமைக்ரான் தொற்றும் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா திரிபு தொற்றான ஒமைக்ரான் அதி வேகமாக பரவும் என்றும் குறிப்பாக சிறார்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அதனால் தான் பதினைந்து முதல் பதினெட்டு வரை உள்ள சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த முடிவெடுத்து, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன் தொடர் நடவடிக்கையாக சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியுள்ளது. சிறார்கள் தடுப்பூசிக்கான முன்பதிவு இரண்டு தினங்களுக்கு முன் துவங்கியது. இன்று காலை நிலவரப்படி நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் பேர் கோவின் தளத்தின் மூலம் முன்பதிவு செய்துள்ளனர்.

ஆதார் மற்றும் இதர தேசிய அட்டைகள் மட்டுமின்றி, மாணவர்களின் பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தியும் தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பதிவு செய்யப்படுகிறது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி இந்தியாவில் 15&18 வயது வரை உள்ள சிறார்கள் 10 கோடி பேர் உள்ளனர். தமிழகத்தில் இந்த வயதுக்குள் உள்ள சிறார்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 20 ஆயிரம் பேர் ஆகும்.

தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணியை சென்னை மாந்தோப்பு அரசு பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்துள்ளார்.
பிரதமர் மோடி முன்னெடுத்த இந்த திட்டம் குறித்து சர்ச்சை கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டாலும் மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைப்படி சிறார்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் வெற்றிகரமாக இன்று தொடங்கி இருப்பது பாராட்டுக்கு உரியது.

தங்கள் குழந்தைகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் பெற்றோரும் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். அதனை முன்பதிவு எண்ணிக்கை காட்டுகிறது.

இந்த தடுப்பூசி கொரோனா பாதிப்பில் இருந்து நம் நாட்டு சிறார்களை நிச்சயம் பாதுகாக்கும். பள்ளிச் சிறார்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. பள்ளி வளாகங்களிலேயே 26 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய மாணவர்களிடம் தான் நாட்டின் எதிர்காலம் உள்ளது. எனவே பெருந்தொற்றில் இருந்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

கொரோனா மற்றும் அதன் திரிபான ஒமைக்ரான் வேகமாக பரவி வரும் நிலையில் மூன்றாம் அலை தொடங்கி விட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.

எனவே தடுப்பூசி போடுவதோடு நின்று விடாமல் ஏற்கெனவே கடைபிடித்து வரும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

பத்து கோடி சிறார்களை பாதுகாப்போம்!

படிக்க வேண்டும்

spot_img