Homeதலையங்கம்நீதிமன்றத் தீர்ப்புகளால் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும்!

நீதிமன்றத் தீர்ப்புகளால் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும்!

ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.

அதில், ஜூலை 11ம் தேதி கூட்டப்பட்ட பொதுக் குழு செல்லாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. அதற்கு முன்பு பொதுக் குழு கூட்டப்பட்ட தினமான ஜூன் 23ம் தேதியன்று இருந்த நிலையே நீடிக்கும் என ஆகஸ்டு 17ம் தேதி தீர்ப்பு வெளியானது.

இந்தத் தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்குச் சாதகமானதாகப் பார்க்கப்பட்டது. அப்போது அவரும் அவரது ஆதரவாளர்களும் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதற்குப் பிறகு இரு தரப்பும் இணைந்து செயல்பட வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை விடுத்தது. இதனை எடப்பாடி பழனிச்சாமி நிராகரித்தார். தீர்ப்பை எதிர்த்து இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேல் முறையீடு செய்தார்.

அந்த வழக்கில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், தனி நீதிபதியின் உத்தரவு ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக் குழுக் கூட்டம் செல்லுபடியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்காலப் பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார். இதனை , இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தி இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவான தீர்ப்பாக அமைந்துள்ளது. ஒற்றைத் தலைமை என்பதை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இந்தத் தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

ஓபிஎஸ் அணியினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். கடந்த மாதம் 18ம் தேதி தனக்கு சாதகமாக வந்த தீர்ப்பு, இரண்டு வாரத்தில் மீண்டும் எடப்பாடி அணிக்கு சாதகமாக சென்றுள்ளதால், ஓபிஎஸ் அணியினர் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அதிர்ச்சியில் இருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை.

ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார். ஆனால், ஏற்கனவே உச்ச நீதிமன்றம் இந்த வழக்கைத் திருப்பி அனுப்பியது. இப்போது மேல் முறையீடு என்பதால் விசாரிக்குமா என்று தெரியவில்லை. அப்படியே விசாரித்தாலும் என்ன தீர்ப்பு வரும் என்பதும் தெரியவில்லை.

ஆனால், ஓ.பன்னீர்செல்வத்திற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. தேர்தல் ஆணையத்தை அணுகி சின்னத்தை முடக்க முயற்சிக்கலாம்.
அதேவேளையில் ஜூலை 11ம் தேதி பொதுக் குழுவில் நான்கு மாதங்களுக்குள் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த முடிவுசெய்யப்பட்டிருந்தது.

தற்போது நீதிமன்றம் சாதகமான தீர்ப்பை வழங்கியிருப்பதால், விரைவில் அந்தத் தேர்தலை நடத்த எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு முயலக்கூடும்.
இந்த விவகாரத்தில் இன்னொன்றும் கவனிக்கத் தக்கதாக உள்ளது.

மாறிமாறி வரும் தீர்ப்பு தான் அது. தனி நீதிபதியின் தீர்ப்பும் டிவிஷன் பெஞ்சின் தீர்ப்பும் மாறிமாறி வந்துகொண்டிருப்பது மக்கள் மனதில் குழப்பத்தையும் விமர்சனங்களையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

இன்பமும் துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை என்பார்கள். அதுபோல அதிமுகவுக்குச் சொந்தம் கொண்டாடி வரும் ஓபிஎஸ் என்ற குடும்பத்திற்கும் இபிஎஸ் என்ற குடும்பத்திற்கும் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் மாறி மாறி வருகிறது.

தற்போது எடப்பாடி பழனிசாமி கை மேலோங்கி நிற்கிறது.
அடுத்து என்ன நடக்கப்போகிறதோ, யாருக்குத் தெரியும்?

படிக்க வேண்டும்

spot_img